எம்.எம்.சில்வெஸ்டர்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜதந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும். 

மேலும், இலங்கை அரசாங்கமும்  பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் சானக்க பண்டார தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த சானக்க பண்டார,

"தெற்காசியாவில் மத அடிப்படைவாதம் அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்தோம். 

நேட்டோ  படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து  வெளியேறியதுடன், ஆப்கானிஸ்தானில் பெரும் போரட்டம் நடைபெற்றதுடன் ஜனநாயக நிலைமை இல்லாமல் போயுள்ளது. 

அங்கு தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதாவது, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி 3 நாட்கள் எனும் சிறிய காலப் பகுதிக்குள்  தலிபான் அமைப்பு புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டனர்.

இந்த கைப்பற்றுதலைத் தொடர்ந்து, தெற்காசிய அரசியல் வலயத்தினுள் தீவிரவாத அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை காணமுடிகிறது.  2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்றும் எமக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்காசியாவில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதம் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசு  மத அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதால் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் மத ரீதியாக ஜனநாயகத் தன்மையை இழக்க நேரிடும். ஆகவே, தெற்காசியாவில் அங்கம் வகிக்கும் நாடென்ற ரீதியிலும் எமது அயல் நாடான பாகிஸ்தான், எமது தெற்காசிய வலயத்தில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாகிஸ்தானுக்கு விசேட பொறுப்பு காணப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும் ஆராய வேண்டுமென்பது அவசியமாகும்.

ஆகவே, சமாதானத்தை விரும்பும் தெற்காசிய மக்கள் கூட்டமொன்று எமக்கு தேவை. அடிப்படை வாதத்தை ஒழித்துக்கட்டி, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதனை ஏற்படுத்துவதற்கு சகல நாடுகளிலும், வலய மட்டத்திலுமாக    பொதுவான பொறுப்பு இருக்க வேண்டும். சமாதானத்துடனான ஆசியாவை உருவாக்க வேண்டும். அது போலவே, முழு உலகுக்கும் சமாதானம் கிடைக்க வேண்டும்.

ஒரு நாடு, ஒரு சட்டம் என கூறும் எமது ஜனாதிபதிக்கு இந்த நாட்டை கொடுத்திருப்பது, எந்தவொருஅடிப்படைவாதமும் இந்நாட்டில் தலைதூக்காமல் இருப்பதற்காகும்.

இந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மீண்டுமொரு யுத்தத்தை அல்ல. சமாதானத்தை ஆகும். இந்நாட்டில் காணப்படும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் ஊடாக அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னிற்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும். மேலும், இலங்கை அரசாங்கமும்  பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தெற்காசியாவில் அமைதியையும், ஒற்றுமையைும் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் முன்னின்று செயற்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

ஆகவே, எதிர்கால சந்தயினருக்கு அடிப்படைவாத அடக்க முறை நிலைமைகளை கொடுத்துவிட்டுச் செல்லாமல், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழும் நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்" என்றார்.