தமிழ் இலக்கியம் பற்றி பேசுகிற போது ஈழத்துக்கென்று தனியிடம் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது.  அதிலும் சம காலத்தில் எத்தனை எழுத்தாளர்கள்?  எல்லோரும் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். 

இலங்கையில் எப்போதும் எங்களுக்கு சிறந்த பெண் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்.  எல்லாத்துறைகளைப்போல அல்ல இது. உண்மையாகவே ஆத்மார்த்தமாக தோன்றினால் மட்டுமே இயங்க முடியும்.  

எனவே உண்மையாகவே எழுத விரும்புகிறவர்கள் நிறைய வாசியுங்கள், பயணம் செய்யுங்கள்,  அதற்கான ஒரு காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று  இளம் எழுத்தாளர் நர்மி தெரிவிக்கிறார். 

வீரகேசரி சங்கமம் பகுதிக்கு வழங்கிய செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு  

கேள்வி : நர்மி என்பவர் யார்? உங்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்?

பதில் : நர்மி என்ற பெயரில் எழுதி வருகிற நான் இந்தியாவில் மதுரையில் பிறந்தேன். இன முரண்பாடுகளின்போது எனது குடும்பம் இந்தியாவிற்கு அகதியாக சென்றது. 1994 இன் பின்னர் இலங்கைக்கு திரும்பியிருந்தோம். ஆரம்ப கல்வியை வவுனியாவிலும் அதன் பிறகு கண்டியிலும் எனது பாடசாலை கல்வியை தொடர்ந்தேன். 

இளம் கலை, முதுகலையை அரசியலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றேன். எனது இரண்டாவது முதுகலையை சர்வதேச அரசியலில் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்றேன். இப்போது குண்டசாலை பிரதேச  சபையில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றுகிறேன்.  

கேள்வி : சர்வதேச அரசியல் கற்கையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள உங்களுக்கு எழுத்து துறையில் எவ்வாறு ஆர்வம்?

பதில் : வாழ்வதற்கும், மன இறுக்கங்களில் இருந்தும் என்னை விடுவித்துக்கொள்ளவும் எனக்கு ஏதாவது ஒன்று  தேவைப்பட்டது. அது எதுவென யோசித்தபோது நான் கண்டடைந்ததே எழுத்து. ஏதாவது எழுதுவதன் மூலம் அமைதியாக பல மாற்றங்களை நிகழ்த்த முடியுமென  நம்புகிறேன். எனக்குள் இருக்கிற எண்ணங்களை, சிந்தனைகளை இந்த உலகத்துடன் எப்படி பரிமாறிக்கொள்வதென யோசித்தபோது என்னால் எழுதமுடியும் என்பதை உணர்ந்தேன். 

 கேள்வி : இதுவரை எத்தனை புத்தகங்களை வெளியிட்டீர்கள்?

பதில் : இதுவரை இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். பனிப்பூ என்ற கவிதைத்தொகுப்பு, கல்கத்தா நாட்கள் என்ற பயணநூல்.  மூன்றாவது நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி  : கல்கத்தா நாட்கள் புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது தொடர்பான அனுபவம் எவ்வாறு அமைந்தது?

பதில் : கல்கத்தா நான் மிகவும் நேசித்த நகரம். அதை எழுத முடிவெடுத்தபோது நினைத்தேன். முதலில் அந்த புத்தகம் என்னை திருப்தி படுத்தவேண்டும். என்மனதிற்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என, நான் எழுதி முடித்தபோது உணர்ந்தேன்.

 ஆத்மார்த்தமாக ஒரு வேலையை செய்யும்போது அந்த படைப்பு நிச்சயம் இந்த பிரபஞ்சத்திலும் அதை பிரதிபலிக்கும். கல்கத்தா நாட்களுக்கும் அதுதான் நடந்தது. வாசித்த அனைவரும் அந்த நூலை கொண்டாட தொடங்கிவிட்டார்கள். அதுமிக்க மகிழ்ச்சியான அனுபவம்.

கேள்வி : ஒரு பெண் எழுத்தாளராக உருவெடுத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள்?

பதில் :  நான் எப்போதும் இந்த சமூகத்தின் முன் எனது வெற்றிகளை, மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறேன். எழுத்தை நோக்கிய பயணம் கடினமானது, எப்போதும் விமர்சனங்களோடு இயங்குகிற ஒரு துறை. அதில் நம்மை நிலைநாட்ட நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது. ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். 

பெண் என்பதால் எல்லாம் இலகுவில் கிடைத்துவிடும் என்ற மட்டமான விமர்சனங்களோடு இங்கும் சிலர் இருப்பார்கள். பெண்கள் ஏனைய துறைகளில் எதிர்கொள்ளும் எல்லா சவால்களும் இங்கும் உண்டு. கற்கவும் தேடவும் நம்மை தேடிய ஒரு நீண்ட பயணம் இது. ஒரு மரம் கண்ணுக்கு புலப்படாமல் வேர்களை நிலத்தில் படரவிட்டப்படி தன்னை உறுதிபடுத்திக்கொள்வது போல எங்களை அமைதியாக வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்வி  : நாங்கள் வியந்து பார்க்கின்ற தென்னிந்திய எழுத்தாளர் பா. ராகவனுடன் நீங்கள் நெருங்கி பணியாற்றுகின்றீர்கள், அந்த அனுபவம்?

பதில் : நான் அடிப்படையில் ஒரு அரசியல் பட்டதாரி. எனது இரண்டாவது முதுகலையை சர்வதேச அரசியலில் மேற்கொண்டேன். அரசியல் கற்கிற அதுவும் சர்வதேச அரசியலை விரும்பி கற்கிறவர்கள் பாராவை நிராகரிக்கவே முடியாது. அப்படித்தான் பாரா என்கிற எழுத்தாளர் எனக்கு அறிமுகமாகினார். 

அவரது நூல்களை படித்தபோது தீவிர வாசகியாக மாறிப்போனேன். எழுத்து என்ற துறையை நான் தேர்ந்தெடுத்த போது பாரா எனக்கு குரு என்று சொல்லலாம். எழுத வேண்டுமென நான் முடிவெடுத்தபோது முதலில் கூறியது அவரிடம்தான், அவர் என்னை வழிநடத்தினார். எழுத்துத்துறையில் அவருடைய அர்ப்பணிப்பு, நேர்த்தி, உழைப்பு என்பன மூலம் எங்களைப்போன்ற இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக  பாரா இருக்கிறார்.

கேள்வி : இலங்கையில் எழுத்துத்துறை அதில் பெண்களின் பங்களிப்பு?

பதில் : தமிழ் இலக்கியம் பற்றி பேசுகிற போது ஈழத்துக்கென்று தனியிடம் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது.  அதிலும் சம காலத்தில் எத்தனை எழுத்தாளர்கள்?  எல்லோரும் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் எப்போதும் எங்களுக்கு சிறந்த பெண் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். 

சமகாலத்தில் தமிழ்நதி , ஈழவாணி, அனார், சர்மிளா வினோதினி, சர்மிளா செய்யத், பிரமிளா பிரதீபன் என பலர் உற்சாகமாக சர்வதேச ரீதியில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும் போது குறைவு. பெண்கள் பேசவேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இன்று உண்டு. அவர்களின் கதைகளை அவர்கள் எழுத முன்வர வேண்டும்.

கேள்வி : கண்டி - சென்னை என்று ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள் நர்மியின் அடுத்த இலக்கு என்ன?

பதில் : எனது அடுத்த இலக்கு எதுவென எனக்கு தெரியாது. தீவிரமாக எழுத வேண்டும் என இப்போது இருக்கிறது. அடுத்தது பயணங்கள் அவ்வளவுதான்.

கேள்வி : சர்வதேச அரசியல் ஆய்வாளர் என்ற வகிபாகத்தை உங்களிடம் எதிர்பார்க்கலாமா?

பதில் : சர்வதேச அரசியலில் ஆய்வுகளை செய்யவேண்டும் என்பது எனது மிகப்பெரிய விருப்பம். எனது இளங்கலை பட்டப்படிப்பில்கூட சர்வதேச முரண்பாடு தொடர்பான ஆய்வையே நான் செய்திருந்தேன். எப்போதும் அத்துறை சார்ந்து இயங்க எனக்கு விருப்பமுள்ளது.

கேள்வி : சமூக வலைத்தளங்களில் புத்தக ஆய்வு, அறிமுகம் செய்கின்றீர்கள். அந்த அனுபவம்?

பதில் :  மலையகத்தை பொறுத்தவரை வாசிப்பு பழக்கம் என்பது குறைந்துக்கொண்டே வருகிறது. இதையே நானும் சொல்லிக்கொண்டிருக்காமல் என்னால் என் சமூகத்திற்கு என்ன செய்ய முடியு‍மென யோசித்தபோது நான் உருவாக்கிய அமைப்பே The Readers எனும் அமைப்பு, அதன் பிரதான இலக்கே மலையகத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க பணியாற்றுவதாகும். அதன் ஒரு கட்டமே The Readers முகநூல் பக்கத்தில் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம்.

கேள்வி  : எழுத்து துறையில் பிரவேசிக்க வேண்டும், புத்தகங்களை எழுத வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கின்ற இளம் சந்ததியினருக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : எல்லாத்துறைகளைப்போல அல்ல இது. உண்மையாகவே ஆத்மார்த்தமாக தோன்றினால் மட்டுமே இயங்க முடியும்.  எனவே உண்மையாகவே எழுத விரும்புகிறவர்கள் நிறைய வாசியுங்கள், பயணம் செய்யுங்கள்,  அதற்கான ஒரு காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

கேள்வி : சிறுவயது தொடக்கம் இந்த நிலத்திலும் அண்டை நிலத்திலுமாக நீங்கள் சேகரித்திருக்கிற கதைகள் நிச்சயமாக நிறைந்திருக்கும். அவற்றிற்கு உருக்கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா?

பதில் : நிச்சயமாக இருக்கிறது. எத்தனைகோடி மனிதர்களை பார்த்துவிட்டேன். எவ்வளவு கதைகள், எனது இந்தியா பயணங்களில் நான் சந்தித்த மனிதர்களினதும், தேசங்களினதும் கதைகளை புனைவாக எழுதும் முயற்சியில் இருக்கிறேன். ஆம் எனது மூன்றாவது நூல் சிறு கதைகளாக வெளிவரும். எழுதிக்கொண்டிருக்கின்றேன்.