ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமானால் தெற்காசிய சமுதாயத்திலும் அரசியலிலும் பெரும் தாக்கம் ஏற்படும்.  தெற்காசிய நாடுகளில் உள்ள முஸ்லிம் சனத்தொகை தலிபான்களின்  தீவிரவாத அரசியல் சிந்தனைகளினால் எடுபடக்கூடிய சாத்தியமும் இருக்கிறது என்று இந்திய அரசியல் ஆய்வாளரும் கல்விமானுமான கல்பூஷண் வாரிக்கூ கூறியிருக்கிறார்.

  

புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்  சர்வதேச கற்கைகளுக்கான கல்லூரியில், மத்திய ஆசிய செயற்திட்டத்தில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றிவரும் வாரிக்கூ, மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான ஏ. யதீந்திராவுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

அந்த நேர்காணலை கேள்வி பதில் வடிவில் இங்கே தருகிறோம்.

கேள்வி : உலக அரசியலில் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை அடுத்து உடனடியாகவே தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இது எவ்வாறு நடந்தது. கடந்த இருபது வருடகாலத்திலும் தலிபான்களினால் எவ்வாறு தாக்குப்பிடிக்க முடிந்தது? எல்லாவற்றுக்கும் மேலாக - ஒரு பின்தளம் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாதே. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் ?

பதில்: தலிபான்கள் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் இருந்தார்கள். பாகிஸ்தானிடமிருந்து கிடைத்த வெளிப்படையான ஆதரவைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது நிலையை வலுப்படுத்திக்கொண்டார்கள். அத்துடன்  தலிபான்களுடன் இணக்கப்பாடு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உடந்தையாக அமெரிக்காவும் செயற்பட்டது. ரஷ்யர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதற்காக தீவிரவாத இஸ்லாமிய முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்களை பெருமளவில் வழங்கியதன் மூலம் தாங்களாக சில தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கிய சிக்கலில் இருந்து விடுபட்டுக்கொள்வதற்காக அமெரிக்கர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.

  

ரஷ்யர்களை வெளியேற்றும் இலக்கை அமெரிக்கர்கள் சாதித்தார்கள். ஆனால், முஜாஹிதீன்களை நிராயுதபாணிகளாக்கவேண்டும் என்று அவர்கள் அக்கறைப்படவில்லை. ரஷ்யர்கள்; வெளியேறிய உடனடியாகவே முஜாஹிதீன்கள் நாட்டை உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளினார்கள். அண்மையில் அமெரிக்கர்கள் அவசர, அவசரமாக வெளியேறியபோது, கூடவே, கோடிக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நவீன ஆயுதங்களையும் சுடுகலன்களையும் போர்விமானங்களையும் ஹெலிகெப்டர்களையும் விட்டுச்சென்றார்கள். அவையெல்லாம் இப்போது தலிபான்களின் கைகளில் இருக்கின்றன. அமெரிக்கர்களின் இலக்கு ரஷ்யர்களும் சீனர்களுமே என்பதை எம்மால் பார்க்க முடிகிறது. இதனால் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கு பெரும்பாதிப்பு ஏற்படப்போகிறது.

கேள்வி: தலிபான்களின் மீள் எழுச்சி உலகம் பூராவுமுள்ள நாடுகடந்த ஜிஹாதிகள் மத்தியில் பெரும் மனக்கிளர்ச்சியை  ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அல்-ஹயெடாவின் மீள் எழுச்சிக்கு இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் குறைந்தபட்சம் 15மாகாணங்களில் அல்-ஹயெடா சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூறியிருக்கிறது. அதேவேளை, அமெரிக்காவினால் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் என்று தடைசெய்யப்பட்டிருக்கும் ஹக்கானி இயக்கம் தலிபான்களின் ஒரு அங்கமாக இருப்பதுடன் 1980 களிலிருந்து அல்-ஹயெடாவின் நெருங்கிய நேச அணியாகவும் விளங்கிவருகிறது. சிலர் இதை தலிபான் - 2  என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நிலைமை அவ்வாறானதாக இல்லை. தலிபான்களின் எழுச்சியையும் உலகளாவிய ஜிஹாதி கிளர்ச்சியையும் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்: தீவிரவாத தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்துக்கு வந்ததை இந்தியாவில் உள்ள தீவீரவாத முஸ்லிம் குழுக்கள் மற்றும் அரசியல் குழுக்கள்  வரவேற்கின்றன. அதன் உளவியல் தாக்கங்களின் விளைவாக இந்தியாவில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஊக்கம் கிடைக்கப்போகின்றது. ஐ.எஸ்.ஐ. எஸ் மற்றும் அல்-ஹயெடா  உட்பட, இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களது நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஊக்கம் பெறுவார்கள்.

ஐரோப்பா, அமெரிக்கா உட்பட இஸ்லாமியர்கள் இல்லாத நாடுகளிலும் அதை அவர்கள் செய்யப்பார்ப்பார்கள். ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் இஸ்லாமிய எழுச்சி காணப்படுகிறது. பழைய தேவாலயங்கள் விற்பனை செய்யப்பட்டு பள்ளிவாசல்களாக்கப்படுகின்றன.

   

கேள்வி: தலிபான்களின் மீள் எழுச்சி குறித்து பாகிஸ்தான் பரவசமடைந்திருப்பது போலத் தோன்றுகிறது. இது காஷ்மீரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்துவருகின்றன. காஷ்மீரிலும் வேறெங்குமுள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக தலிபான்கள் கூறியிருக்கிறார்கள். பயங்கரவாத பின்னணியில் தலிபான்கள் இந்திய தேசிய பாதுகாப்பு மீது எவ்வாறு தாக்கத்தைச் செலுத்துவார்கள்?

பதில்: பாகிஸ்தானைப் பொறுத்தவரை அதற்கு அடிபணிந்து செயற்படக்கூடிய அரசாங்கம் ஒன்று ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தலிபான்களை ஊக்குவித்து வளர்த்தது. பிராந்தியத்தில்  பாகிஸ்தானின் நீண்டகால  மூலோபாய இலக்குகளை பூர்த்தி செய்வதற்காகவும், இந்தியாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காகவும் அவ்வாறு செய்யப்படுகிறது. அதேவேளை,  காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுகின்ற  லஷ்கர் ஈ தைபா மற்றும் ஜாய்ஷ் ஈ முஹமட் போன்ற பயங்கரவாத அமைப்புக்களை பாகிஸ்தான் இயக்குகிறது. கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை கடப்பதற்கு இந்த பயங்கரவாத அமைப்புகளால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இந்திய படைகளுடனான  மோதல்களின்போது பாகிஸ்தான் குடியுரிமையைக் கொண்ட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. காஷ்மீருக்குள்  ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் கடுமையாக கஷ்டப்படுகிறது. ஏனென்றால் கடந்த பதினெட்டு மாதங்களாக காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளில் ஒரு வீழ்ச்சி காணப்படுகிறது.

கேள்வி:  தலிபான்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் பொதுவில்  தெற்காசியாவில் அரசியல் ஒழுங்கில் எத்தகைய தாக்கம் ஏற்படும்?

பதில் : தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமானால் அவர்களின் மீள்வருகை தெற்காசிய சமுதாயத்திலும் அரசியலிலும் தாக்கம் ஏற்படும். மேலும் பொதுவில் தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் சனத்தொகை தலிபான்களின் தீவிரவாத மற்றும் அரசியல் சிந்தனைகளினால் எடுபடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

கேள்வி: தலிபான்--சீன தேனிலவொன்று சாத்தியமா? உண்மையில் தலிபான்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் சீனா அக்கறை கொண்டிப்பது போலத்தோன்றுகிறது. சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் உய்குர் கிளர்ச்சியாளர்களுடன் இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்காக தலிபான்களுடன் உடன்படிக்கையொன்றை சீனா எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சீனா முன்னர் சுதந்திரமாக செயற்படமுடியவில்லை. ஏனென்றால் அமெரிக்கா அங்கே இருந்தது. ஆனால் இப்போது சீனாவுக்கு கதவு திறந்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், சீன சதுரங்க ஆட்டத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில் : ஆப்கானிஸ்தானில் இருந்து உய்குர் தீவிரவாதிகளை வெளியேற்றியதன் மூலம் தலிபான்கள் ஏற்கெனவே சீனாவுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு உய்குர் பயங்கரவாத நடவடிக்கையையும் தடுப்பதற்காக சின்ஜியாங்கில் சீனா கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள கனிம வளங்கள் மீது சீனா கண்வைத்திருக்கிறது. அத்துடன் சீன ஜனாதிபதியின் பேரார்வம் மிக்க ‘மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்திற்கு ஆப்கானிஸ்தானையும் சேர்த்துக்கொள்ள பெய்ஜிங் முயற்சிக்கும்.

கேள்வி: “வடகிழக்கு இந்தியாவில் பயங்கரவாதத்தின் பின்னணியில் சீனாவின் கரங்கள்' என்ற ஒரு அறிக்கையை விவேகானந்தா சர்வதேச பவுண்டேசன் வெளியிட்டிருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பகைமை எல்லையிலும் வேறு துறைகளிலும் கூர்மையடைகின்றது என்று அந்த அறிக்கை கூறியிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் பாரம்பரியமற்றதும் மறைமுகமானதுமான நடவடிக்கைகளில் சீனா இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தலிபான்களின் மீள்வருகை இந்தியாவில் எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: சீனாவும் இந்தியாவும் வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்து ஊக்குவிக்கின்றன. மத்திய இந்தியாவில் நக்சலைட்டுக்களையும் தேசவிரோதிகளையும் ஆதரித்து சீனாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.