(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டிய ஞானசார தேரர் மடு தேவாலய காணிப்பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன் ?இவ்வாறு திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டிய ஞானசார தேரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி  எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை,ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட   2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியகுழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்,

மடு தேவாலயத்துக்கும் அங்குள்ள 27 குடும்பங்களுக்கும் விவசாயக்காணி தொடர்பில் பிணக்குள்ளது. இந்நிலையில்  விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் காணி எனவும் மடு தேவாலயத்துக்கு 5 ஏக்கர் காணி எனவும் பிணக்கிற்கு தற்காலிக தீர்வு  காணப்பட்டுள்ளது.

இந்த பிணக்கு காணப்பட்ட போது ஞானசார தேரர் இப்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு வந்த  பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தேவையற்ற தலையீடுகளை  செய்துள்ளார். 

அவருக்கு அங்கு என்ன வேலை? திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டிய ஞானசார தேரர் மடு தேவாலய காணிப்பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன்?இவ்வாறு திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டிய ஞானசார தேரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

இதேவேளை விவசாயிகளை வருத்தினால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது எனவும்   கூற விரும்புகின்றேன். அத்துடன் புளொட் அமைப்பின் செயலாளர் சதானந்தனின் மறைவுக்கு எனது  அனுதாபத்தை  தெரிவிக்கும் அதேவேளை எனது ஊரான  விடத்தல் தீவை சேர்ந்த அற்புதசீலி என்பவர் சிறு கைத்தொழில் துறையில் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பெற்றதுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்றார்.