ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

கோப்குழு அறிக்கையில் வெளிப்படுத்தப்படும் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது. இதுதொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22 ) இடம்பெற்ற பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் (கோப்குழு) அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இன்று உரம் வழங்கக்கோரிய விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கின்றது. போராட்டங்களின் போது கொடுப்பாவிகள் எரிக்கப்படுவதும் அவ்வப்போது இடம்பெறுகின்றது என்றாலும் நாட்டின் வரலாற்றில் எரிக்கப்பட்ட கொடுப்பாவிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால் தற்போதைய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கொடும்பாவியாகும். அந்தளவுக்கு பாரிய பிரச்சினையாக விவசாயிகளின் போராட்டம் மாறி இருக்கின்றது. அதனால் விவசாய அமைச்சரும் இந்த காலப்பகுதியில் சற்று பிரபலமாகி இருக்கின்றார்.

அத்துடன் பாாரளுமன்ற கோப்குழுவில் நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கி்ன்றன. குறித்த நிறுவனங்களின் மோசடிக்கு காரணமானவர்கள் தொடர்பாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது. 

பாராளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் தொடர்பான பொறுப்பு சபாநாயகருக்கே இருக்கின்றது. அதில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கே இருக்கின்றது. அதனால் கோப்குழு அறிக்கையில் தெரிவிக்கப்படும் மோசடி காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் மஹபொல நிதியம், எஸ்.எல்.ஐ.ஐ.டி. நிறுவனம் தொடர்பாகவும் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. மஹபொல நிதியத்தினால் எஸ்.எல்.ஐ.ஐ.டி. நிறுவனம் நிறுவப்படவில்லை. அது பிரத்தியேக நிர்வாகத்துக்கு கீழே இருந்து வருகின்றது. அதுதொடர்பாக கோப்குழுவில் விசாரணை மேற்கொண்டபோது அதன் உண்மை நிலை வெளிப்பட்டிருக்கின்றது என்றார்.