(நா.தனுஜா)

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவு அமையவேண்டியதன் அவசியம் தொடர்பில் சீனத்தூதுவரிடம் வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Image

இச்சந்திப்பின்போது இலங்கை மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

அதேவேளை இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலான இருதரப்பு நட்புறவின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் சீனத்தூதுவரிடம் வலியுறுத்தினார்.

மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேவேளை, தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் கடன் நெருக்கடியைக் கையாள்வதற்கான உதவிகளை வழங்குமாறும் சஜித் பிரேமதாஸ சீனத்தூதுவர் ஜென்ஹானிடம் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை இச்சந்திப்பின்போது சீன - இலங்கை நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நல்லுறவை நினைவுகூர்ந்த சீனத்தூதுவர், அதனைத் தொடர்ந்து பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித்தலைவரிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.