(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஆரம்ப பிரிவை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் அதற்கு முன்னர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டால் தமது பிள்ளைகளை பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்வதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த  ஹேரத் | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பாடசாலைகளை துரிதமாக மீள ஆரம்பிப்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும். காரணம் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களதும் கல்வி செயற்பாடுகள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் பாடசாலை செல்வது அவசியமாகும்.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு எதிர்பார்ப்புடன் இருப்பதைப் போன்றே பெற்றோரும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

எனவே பாடசாலைகளை திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிப்பதாயின் அவற்றின் வளாகங்கள் , கட்டடங்களை தூய்மைப்படுத்தி முறையான திட்டமிடலுடன் ஆரம்பிக்க வேண்டும்.

அவ்வாறு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டால் தமது பிள்ளைகளை பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம். பாடசாகைளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மாகாண கல்வி அமைச்சு உள்ளிட்டவை உரிய தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.