இளம்பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரால் 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வடக்கு டில்லியில் அமைந்துள்ள புராரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக  பணிபுரிந்துவரும் 21 வயதுடைய இளம் பெண்ணான கருணா வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது சுரேந்தர் சிங் என்ற இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த கருணாவை அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கருணாவை கத்தியால் குத்தி தப்பிச் சென்ற சுரேந்திர சிங்கை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், 

 "கொலை செய்யப்பட்ட கருணா தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி  வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே கருணாவை சுரேந்தர் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். 

இது குறித்து கருணாவின் குடும்பத்தார்  5 மாதங்களுக்கு முன்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் இரு குடும்பத்தாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதையடுத்து சமாதானம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் சுரேந்தர் கருணாவை பின் தொடர்ந்து அவரை கொலை செய்துள்ளார்” என பொலிஸார் தெரிவித்தனர்.