ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் உள் நுழைந்த காட்டு யானையால்  மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கொடுவாமடு கிராமம் காளிகோயில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மூத்ததம்பி காளிக்குட்டி என்பவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.

மாடு மேய்ப்பவரான இவர் வழமைபோன்று தனது மாடுகளைத் தேடி செங்கலடி கறுப்புப் பாலத்தை அண்டியுள்ள பகுதிக்குச் சென்றபோது பற்றைக் காடுகளுக்குள் மறைந்திருந்த காட்டு யானையால்  மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.