(பாராளுமன்ற செய்தியாளர்)

லங்காகம பகுதிக்கு பாரியளவிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், அதனை சரியான முறையில் முகாமை செய்ய நடவடிக்கை எடுப்பது முக்கியமானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.

லங்காகம - நெலுவ வீதி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில்

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களில் லங்காகம பகுதியை பார்வையிடுவதற்கு பாரியளவிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல குறிப்பிட்டார். 

இதனால் எதிர்காலத்தில் பாரியளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும், அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான வேலைத்திட்டமொன்று தேவையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, சிங்கராஜ வனத்தைப் பார்வையிடச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் லங்காகம நுழைவைப் பயன்படுத்தும் வகையில் இணையத் தகவல் முறைமை (Google Map) புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் விரைவில் கண்டறிந்து செயற்படுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைவழங்கினார்.

அதேபோன்று, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு தேவையான நடைவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கண்டி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கண்டி நகரில் கேபிள் கார் திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.