இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமாகியது.

தற்போது 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை 278 நாட்களில் எட்டியுள்ளது இந்தியா. முதன்முறையாக ஜனவரி 16 ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 30 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 70.7 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு மேலும் வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

278 நாட்களில் 100 கோடி பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்றால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 36 இலட்சம் பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று. 

இதுவரை இந்தியாவில் 3.6 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 4 இலட்சத்து 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகளவில் மூன்றாவது எண்ணிக்கையாகும். முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இந்தியா படைத்துள்ள புதிய சாதனைக்கு,  உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும், உலக நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. ''இந்த வரலாற்று சாதனையை எட்டுவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள்,'' என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, 10 கோடி தடுப்பூசி இலக்கை அடைய 85 நாட்களும், 10 முதல் 20 கோடி இலக்கை கடக்க 45 நாட்களும், 20 முதல் 30 கோடி டோஸ் இலக்கை அடைய 29 நாட்களும் ஆகிய நிலையில், 40 கோடி இலக்கை 24 நாட்களிலும், 50 கோடி டோஸ் இலக்கை 20 நாட்களிலும் எட்டின. 50 கோடி டோஸ் என்னும் மைல்கல் ஆகஸ்ட் ,6 ஆம் திகதி எட்டிய நிலையில் 50 முதல் 100 கோடி டோஸ் என்னும் மகத்தான சாதனையை வெறும் 76 நாட்களில் அடைந்து உலகளவில் சாதித்துள்ளது.