ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

உர பிரச்சினைகள் காரணமாக பெருந்தோட்டம் மற்றும் விவசாயம் ஆகியன முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய ரீதியாக விவசாயத்தை நம்பியுள்ள சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் ஐம்பதற்கு - ஐம்பது என்ற ரீதியில் இரசாயான மற்றும் சேதன பசளைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நாட்டின் உர பிரச்சினை குறித்தும் விவசாயிகளின் நெருக்கடி நிலைமை குறித்தும் எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. இலங்கையின் பாரம்பரிய தொழில்களில் விவசாயமே முக்கியமானது. எனினும் விவசாயத்தில் ஒரு தொய்வு நிலைமை ஏற்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் பரவல் நிலைமையில் விசவாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியில் பெருந்தோட்ட பயிர் செய்கை, சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் ஆகிய மூன்றுமே பாதிக்கப்பட்டுள்ளது. உர பிரச்சினைகள் காரணமாக பெருந்தோட்டம் மற்றும் விவசாயம் ஆகியன முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய ரீதியாக விவசாயத்தை நம்பியுள்ள சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரசாயான உரத்தை நிறுத்தியமைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் சகல உரத்தையும் நிறுத்தியமையே பிரச்சினையாகும். ஐம்பதற்கு -ஐம்பது என்ற ரீதியில் இதனை கையாண்டிருக்க முடியும். அப்படி முறைமைகளை கையால் வேண்டும்.

 நுவரெலியா மாவட்டத்தில் எட்டாயிரம் ஹெட்டேயர் நிலப்பரப்பில் விவசாயம் செயாதுள்ளனர். காரணம் இதற்கான உரம் கிடைகாதமையாகும். நனோ நைற்றிஜன் கொண்டுவந்துள்ளதாக கூறினாலும் அதனால் பலன் இல்லை. 

நைட்ரஜன் இறக்குமதி செய்வதில் இவ்வளவு பணம் வீணடிக்காது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்  அதுமட்டுமல்ல இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விதைகள் கலப்பு விதைகளாகும், அவற்றை உருவாக்க இரசாயான உரமே அவசியம், ஆய்வுகளை மேற்கொண்டு இதனை அறிந்துகொள்ளுங்கள் என்றார்.