ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டுள்ளமை இதற்கு நல்ல உதாரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நீதி அமைச்சர் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலங்கள் பகுதி பகுதியாக முன்வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் போன்றவை தனித்தனியாக முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே இவ்வாறு முன்னெடுப்பது கடினமானது, குழப்பங்களையும் ஏற்படுத்தும். ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டங்களை சவாலுக்கு உட்படுத்தும் வேளையில் எம்மாலும் பல காரணிகளை தவறவிட நேரிடும்.
அதேபோல் தண்டனை சட்டக்கோவையில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, அதனை நாம் வரவேற்கிறோம், ஆனால் மரண தண்டனை குறித்து ஏன் இறுக்கமான தீர்மானம் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
இந்த நாட்டில் 1976ஆம் ஆண்டு தொடக்கம் மரண தண்டனை தடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் காரணிகளை கொண்டு இவை தடுக்கப்படுகின்றது. அப்படியென்றால் ஏன் இதனை முழுமையாக நீக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையிலும் கூட அவை இறுதிப்படுத்தப்படவில்லை. அதுமட்டும் அல்ல, மரண தண்டனை குற்றங்களை குறைக்காது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
மரண தண்டனை இந்த நாட்டில் குற்றங்களை குறைத்ததாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. விஞ்ஞான பூர்வமாக இது நிருபிக்கப்படவில்லை. ஆகவே இந்த விடயங்களை கவனம் செலுத்துமாறு நீதி அமைச்சரை வலியுறுத்துகின்றோம்.
மேலும் நீதித்துறையில் நீதியை நிலைநாட்டுவதில் பாரிய பின்னடைவு உள்ளது. இந்த அரசாங்கம் மட்டுமல்ல இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையில் விடுபாட்டு நிலைமையே காணப்படுகின்றது.
இதற்கு நல்ல உதாரணம் என்னவென்றால் அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஒரு இராஜாங்க அமைச்சர் செயற்பட்ட விதம் குறித்து சாட்சியங்கள் இருந்தும் அவரது அமைச்சுப்பதவி பறிபோகவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குற்றவாளியென அடையாளப்படுத்தும் அந்த இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, அதாவது அவர் எமக்கு விசுவாசமான நபர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது.
சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றால் இன்று சிறைகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் எவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஒரு தனி நபர் கூட இருக்க மாட்டார். ஆகவே வெறுமனே சட்ட விடுபாட்டு நிலைமையையே இது வலியுறுத்திக்கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த நாடு மிக மோசமான நிலைமை நோக்கி செல்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM