ஓமானை தோற்கடித்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது ஸ்கொட்லாந்து

By Vishnu

22 Oct, 2021 | 07:42 AM
image

ஓமன் அணிக்கு எதிரான டி-20 உலகக் கிண்ணத்துக்கான சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிப் போட்டியில் ஸ்கொட்லாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு ஓமான், அல் அமரத் மைதானத்தில் ஆரம்பமான முதல் சுற்று போட்டியில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வென்ற ஓமன் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அணி சார்பில் அதிகபட்சமாக லியாஸ் 37 ஓட்டங்களையும், மசூத் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஸ்கொட்லாந்து சார்பில் பந்து வீச்சில் டேவி 3 விக்கெட்டுகளையும், சஃபியான் ஷெரீப், லீஸ்க் தலா 2 விக்கெட்டுகளையும் மற்றும் மார்க் வாட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Image

இதையடுத்து 123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 17 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி பெற்றது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சே 20 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் கைல் கோட்சர் 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க மத்தேயு கிராஸ் 26 ஓட்டங்களுடனும், ரிச்சி பெரிங்டன் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ஆட்ட நாயகன் விருது ஜோஷ் டேவிக்கு வழங்கப்பட்டது. 

இந்த வெற்றியின் மூலம் டி-20 உலகக் கிண்ணத் தொடரில் ஸ்கொட்லாந்து எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றியை பிதவுசெய்தது.

இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற குழு பி யில் மற்றொரு ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி, பப்புவா நியூ கினியாவை 84 ஓட்டங்களினால் தோற்கடித்து.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேண் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை சேர்த்தது. 

அதிகபட்சமாக அணித் தலைவர் மஹ்முதுல்லா 50 ஓட்டங்களை பெற்றார். ஷாகிப் அல் ஹசன் 46 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, ஆரம்பம் முதலே பங்களாதேஷ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 

முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து வெளியேறினர். 29 ஓட்டங்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கிப்லின் டோரிகா ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி அரை சதத்தை நெருங்கினார். 

எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ஓட்டங்களில் சுருண்டது.  

கிப்லின் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ஓட்டங்களை சேர்த்தார்.  இறுதியாக பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right