பொலன்னறுவையிலுள்ள தேசிய விளையாட்டு தொகுதியின் உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் விசேட எடைத்தூக்கல் போட்டிகளின் போது 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. இதில் 3 சாதனைகள் சின்த்தன கீதால் விதானகேவால் படைக்கப்பட்டதுடன், ஏனைய 2 சாதனைகளில் ஒன்றை திலங்க விராஜ் பலங்கசிங்கவும், மற்றைய ஒரு சாதனையை சானக்க பீட்டர்ஸும் படைத்தனர்.

89 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்ட சின்த்தன கீதால் விதானகே, ஸ்னெட்ச் முறையில் 135 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 165 கிலோ கிராம் எடையையும், மொத்த எடையாக 300 கிலோ கிராம் எடையையும் தூக்கி குறித்த எடைப்பிரிவில் 3 சாதனைகளை படைத்தார். இதன் மூலமாக தனது திறமை மற்றும்  ஆற்றல்கள் இன்னும் குறையவில்லை என்பதை வெளிக்காட்டியிருந்தார் சின்த்தக்க கீதால் விதானகே.

இதேவேளை, 67 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் திலங்க விராஜ் பலங்கசிங்க, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 150 கிலோ கிராம் எடையை தூக்கி இப்பிரிவுக்கான  இலங்கை  சாத‍னையை தனதாக்கிக்கொண்டார். 

மேலும், 102  கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற சானக்க பீட்டர்ஸ் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 174 கிலோ கிராம் எடையை தூக்கி அப்பிரிவுக்கான க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் சாதனையை படைத்தார்.

இலங்கை எடைத்தூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  அதிவிசேட பிரிவு குழாத்தினர் மற்றும் தேசிய விளையாட்டு வீர,வீராங்கனைகள் குழாத்தினருக்கான திறமைகளை அதிகரிக்கச் செய்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட போட்டிகளின்போதே இந்த சாதனைகள் புதுக்கப்பட்டிருந்தன.