(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் வழக்குளை வாபஸ் பெற்றுக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களதுக்கு அழுத்தம் கொடுக்கும் சக்தி ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருக்கின்றது.

அந்த மறைமுக சக்தி யார் என்பதை தேடிக்கொள்ளவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஹிட்லர் ஆட்சியா இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது - முஜிபுர் ரஹ்மான்  கேள்வி | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களில் 20க்கும் அதிகமான வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன.

அந்த வழக்குகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளாகும். அதேபோன்று 40க்கும் அதிகமான வழக்குகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றது. 

தொழிநுட்ப காரணத்தின் அடிப்படையிலேயே வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். அப்படியாயின் அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யலாம்.

அந்த வழக்குகள் அனைத்தும் அரசாங்கத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிரானதாகும். மாறாக சாதாரண மக்களின் வழக்குகள் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் வாபஸ்பெறவில்லை.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ்பெறப்பட்ட அனைத்து வழக்குகளும் சாட்சியங்கள் தேடிக்கொண்டு, ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்டதாகும். ஆனால் சட்டமா அதிபர் மாறியதுடன் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.

அவ்வாறு நிகழமுடியாது. அப்படியாயின் அரசாங்கத்தில் இருக்கும் இனம் தெரியாத சக்தி ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்துகொண்டு வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. அந்த சக்தி யார் என்பதை தேடிக்கொள்ளவேண்டும்.

மேலும் தற்போதுள்ள பிரதம நீதியரசரே அன்று சட்டமா அதிபராக இருந்து இந்த வழக்குகளை தொடுத்திருந்தார். அப்படியாயின் அவர் பொய் தொடுத்திருக்கின்றாரா? பொய் வழக்கு என்றால், இந்த வழக்குகளை தொடுப்பதற்கு துணையாக இருந்த சட்டமா அதிகர் திணைக்கள உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துககு முடியும். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை. 

அதனால் அரசாங்கத்தின் மறைமுக சக்தி ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்துகொண்டு, நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஜனாதிபதியின்  சப்பாத்துக்கு கீழ் அடிபணிய வைத்திருக்கின்றது. இது நல்லதில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் பிரச்சினை எழ ஆரம்பிக்கின்றது. வரலாற்றில் ஒருபோதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இவ்வாறு வரிசையாக வழக்குகள் வபஸ் பெறப்பட்டதில்லை. இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேசமும் எமது சட்டத்தின் ஆட்சி குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றது. இது எமது நாட்டுக்கு நல்லதில்லை என்றார்