(எம்.மனோசித்ரா)

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஒரு வாரமாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டன. 

அதற்கு தேவையான பைசர் தடுப்பூசி தொகை உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த வாரம் முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. 

அதற்கு தேவையான பைசர் தடுப்பூசி தொகை உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது. காரணம் பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி மாத்திரமே வழங்கப்படும்.

குறித்தவொரு மாகாணத்தில் கல்வி கற்கும் மாணவன் தற்போது தனது சொந்த மாகாணத்தில் (பிரிதொரு மாகாணத்தில்) தங்கியிருப்பாராயின் அதே மாகாணத்தில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.