(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)  

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாது தனது வட்ஸ் அப்  தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் இருந்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் ஒட்டுக்கேட்டுள்ளதாகவும், இது தனது சிறப்புரிமை மீறல் எனவும், ஆகவே இதில் ஈடுபட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தொலைபேசி சேவை வழங்குனர்களை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் சபாநாயகரை வலியுறுத்தினார். 

“பெகசஸ்’ எனும் இஸ்ரேல் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட தொழிநுட்பம் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவிடம் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ( 21 ) சிறப்புரிமை மீறல் கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக என்னை குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தது.

அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு நான் சென்றேன், அப்போதும் ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் செய்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆனால் என்னிடம் ஒரு கேள்வியே கேட்கப்பட்டது. முன்னாள் பிரதமருடன் முகாமைத்துவ கூட்டத்தில் கலந்துகொண்டீர்களா என கேட்டனர்.

ஆனால் இந்த விசாரணைகளின் போதும் இன்னொரு விடயத்தை நான் அறிந்துகொண்டேன். அதாவது எனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் 2018, 2019ஆம் ஆண்டுகளில் இருந்தே ஒட்டுக்கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் நீதிமன்ற அனுமதி ஏதும் இல்லாது குற்றப்புலனாய்வு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளரின் அனுமதியுடன் இதனை மேற்கொண்டதாக கூறினர்.

ஆகவே குற்றப்புலனாய்வு பிரிவினால் எனது தனிப்பட்ட உரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக எனது சிறப்புரிமை, அதிகாரங்கள் என்பன சட்டவிரோதமாக மீறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரதான உரிமையான கருத்து தெரிவிக்கும் உரிமை, சிறப்புரிமை சரத்துக்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயத்தில் 19ஆவது சட்டத்தின் கீழான கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதி இல்லாது எனது தொலைபேசி உரையாடலின் தரவுகளை உரிய தொலைபேசி சேவை வழங்குனர்கள் மூலமாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கியமை மூலமாக அவர்களும் எனது சிறப்புரிமையை மீறியுள்ளனர். 

எனவே குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தொலைபேசி சேவை வழங்குனர்களிடம் விசாரணைகளை நடத்தி தவறு என்று தெரிந்தால் அவர்களை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே சபாநாயகர் சட்டமா அதிபரிடம் இது குறித்து ஆலோசனைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு அதனை அறியத்தருமாறு வலியுறுத்துகின்றேன்.

வட்ஸ் அப் மூலாகவே இந்த தொலைபேசி உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட்ஸ் அப் மூலமான பதிவுகள் அனைத்துமே தரவுகள் (டேட்டா) மூலமாகவே பதிவாகும். இதில் எம்மிடம் இருக்கும் தொழிநுட்பம் மூலமாக வட்ஸ் அப்  பதிவுகளை கண்காணிக்க முடியாது. 

எனவே நான் குறித்த நபர்களுடன் உரையாடியதாக, ஏதேனும் விசேட தொழினுட்பங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கையாண்டால் மட்டுமே இதனை கண்டறிய முடியும். கடந்த காலங்களில் உலகில் பிரதான தலைவர்களின்  வட்ஸ் அப்  பதிவுகளை ஒட்டுக்கேட்டதாக தகவல்கள் வெளியாகின. 

ஆகவே “பெகசஸ்’ எனும் இஸ்ரேல் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட தொழிநுட்பம் குற்றப்புலனாய்வு பிரிவிடம் உள்ளதா? அவ்வாறு இல்லையென்றால் வட்ஸ் அப்  பதிவுகளை எவ்வாறு ஒட்டுக்கேட்டனர் என்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சபையில் வலியுறுத்தினார்.