யாழ்ப்பாணம்‌ கீரிமலை நகுலேஸ்வர சிறாப்பர்‌ மடத்தில்‌, புராதன பிள்ளையார்‌ சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டிருந்த கீரிமலை நகுலேஸ்வர ஆலயம் உட்பட்ட பல சைவ சமய ஆலயங்கள் , சைவசமய மரபுரிமைச் சின்னங்கள் அழிவடைந்தன. 

இந்த நிலையில் சிறாப்பர் மடத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களத்தினால் , மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு சுற்றுவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

 இதனையடுத்து  அதனை மீள் வடிவமைப்புக்குட்படுத்த சுப்பிரமணியர் கதிரவேலு (சிறாப்பர்) குடும்பத்தின் நேரடி வாரிசுகள் நிதிப்பங்களிப்பை வழங்கினர். 

அதற்கமைவாக சிறாப்பர் மடத்தில் காணப்பட்ட பழமை வாய்ந்த பிள்ளையார் சிலை, மீள அதே இடத்தில் சமய முறையின் படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் புஸ்பரட்ணம், கலாநிதி ஆறு.திருமுருகன், தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன், வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயக் குருக்கள், கீரிமலை நகுலேஸ்வர ஆலயக் குருக்கள், சிறாப்பர் குடும்பத்தின் நேரடி வாரிசு சார்பில் கௌரி பொன்னையா, தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் சிறாப்பர் மடத்தினுடைய வரலாறுகள் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.