சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் பெயரை மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் நிறுவனம் தனக்கு கீழ் வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் வைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 4 ஆம் திகதியன்று இலங்கை உட்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஆக்குலஸ் (Oculus) ஆகியன கிளை நிறுவனங்களாக இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரை தனது வீச்சை விஸ்தரித்துவிட்டதாக அந்நாட்டின் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளும் சாடி வருகின்றன. அதனால் பேஸ்புக் மீது கட்டுப்பாடுகள் அவசியம் என்று இருபெருங் கட்சிகளுமே கூறி வருகின்றன.