மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில்  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு  இனம் தெரியாதோரால் இன்று புதன்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை 4 ம் பிரிவு கூட்டுறவு சங்க வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் முச்சக்கரவண்டியில் வாடகைக்கு சென்று  சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய பின்னப் முச்சக்கரவண்டியை வீட்டின் முன்பகுதியில் நிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சத்தம் கேட்டு வீட்டின் கதவைதிறந்து வெளியேவந்தபோது நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து கொண்டிருந்ததையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்ததாகவும் இருந்தபோதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து செதமடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதேவேளை வீட்டின் முன்பகுதி சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன்.  இது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.