எம் . நியூட்டன்

யாழ்ப்பாண மாநகர சபை மீள் சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

சேதனப் பசளை உற்பத்தி என்பது யாழ்ப்பாண மாநகர சபையின் மீள் சுழற்சி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மிகவும் அண்மைக்காலமாக சேதனப்  பசளைக்கு கேள்வி அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக சேதனப் பசளை உற்பத்தியினை நாம் அதிகரித்துள்ளோம்.

அண்மைய காலங்களில் மாதத்திற்கு 25ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் கிலோ சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. "வீரியம்" என்ற பெயரில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான மீள் சுழற்சி மையத்தில் சேதனப்  பசளை உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கிலோ 20 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

தற்போது பெருந்தொகையானோர் இந்த எமது சேதனப்பசளையினை விவசாயிகள் மற்றும் ஏனைய பொதுமக்கள் ஆர்வத்துடன் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள் மாநகரசபை மீள் சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளையினை மீள் சுழற்சி மையத்திலும் மற்றும் ஏனைய திரட்டு அலுவலங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.