(இராஜதுரை ஹஷான்)

பங்காளி கட்சிகளின் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியும். எனவே  தான் ஜனாதிபதி பங்காளி கட்சிகளை புறக்கணிக்கிறார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும் வெட்கமில்லாமல் அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒன்றிணைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கெரவலபிட்டிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட  ஸ்ரீ லங்கா சுதந்திர  பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 பிரதான பங்காளிக்கட்சி தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி புறக்கணித்துள்ளார். பங்காளி கட்சிகளை ஜனாதிபதி புறக்கணிப்பது இதுவொன்றும் புதிதல்ல.

பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவது பயனற்றது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.பங்காளி கட்சிகளின் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி,உட்பட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் உள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.சுதந்திர கட்சியின் கொள்கையை அவமதிக்கும் வகையில் கருத்துரைக்கிறார்கள். வெட்கமில்லாமல் சுதந்திர கட்சியினர் தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.

பங்காளி கட்சியின் தலைவர்கள் அரசாங்கத்தில் மூன்றாம் தரப்பினரை போன்று செயற்படுகிறார்கள். தம்மை தெரிவு செய்த மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியினராக செயற்பட வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டார்கள். மக்களின் நிலைப்பாட்டை காட்டிலும் அவர்களுக்கு தங்களின் சுய தேவைகள் மாத்திரம் முக்கியமானதாக உள்ளது.

அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கை பிரதானமாக காணப்படுகிறது. உர பிரச்சினையால் தேசிய பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆளும் தரப்பில் உள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினைகள் குறித்து கருத்துரைக்காமல் உலக சந்தையின் விலையேற்றம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பாக கருத்துரைத்துக் கொள்கிறார்கள் என்றார்.