(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற  ஜனாதிபதியின் நோக்கமும், அரசாங்கத்தின் நோக்கமும் தெளிவாக உள்ளது.

எனினும் கொவிட் வைரஸ் தொற்றுப்பரவல் சவால்களுக்கு மத்தியில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கதை துரிதப்படுத்த முடியாது போயுள்ளது என ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தை விடவும் கொவிட் சவால்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதே சவாலாக அமைந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தும், நாட்டுக்கு மிகச் சரியான, அதேபோல் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, சகல மக்களும் சம உரிமையுடன் ஒற்றுமையாக வாழக்கூடிய சட்டங்களை இயற்றி புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதில் எவரும் அச்சமோ சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை. ஜனநாயக ரீதியில் இந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம் என்றார்.