ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பருக்குமிடையில் சந்திப்பு நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கஷ்மீரில் இடம்பெற்ற வன்முறையினால் பலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை மக்களின் சார்பிலும் அனுதாபங்களைத் தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்திலுள்ள அனைவரும் இவ்வாறான வன்முறைகளை இல்லதொழிப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அச்சம்பவம் ஏற்படுவதற்கு காரணமான நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.

அவ்வாறான சிக்கலான நிலைமைகளில் மிகுந்த பொறுமையாகவும் கலந்துரையாடல்களுடாகவும் அவற்றை அணுகுவதன் மூலமே சாத்தியமான தீர்வுகளை இவ்வாறான பிரச்சனைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தாமதங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், அத்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றை முன்னெடுக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் தான் தொடர்ச்சியாக ஆராய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ் இருதரப்பு சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான மீனவர் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு அரசாங்கங்களும் மனிதாபிமான முறையில் இப்பிரச்சினையை பார்க்கவேண்டும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டவிரோதமாக எல்லைதாண்டும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை சாத்தியமான வழிகளில் விரைவாக விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எல்லைதாண்டி மேற்கொள்ளப்பட்டுவரும் மீன்பிடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளங்களில் ஏற்படும் நீண்டகால பாதிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வடக்கின் மீனவர்களும் கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஆகவே மீனவ சமூகத்தினரை உள்ளடக்கி இப்பிரச்சினைக்கான ஆரம்பத் தீர்வுகளை விரைவாக் கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு மத்திய அரசின் உதவியினை அவர் வலியுறுத்தினார்.