வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிள்ற உடன்படிக்கைகளால் எமக்கு ஏற்படுகின்ற நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள்  நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு  அபிவிருத்திக்கு பங்காற்றும் வழிகள்  அவை சூழலுக்கு பாதிப்பினை உருவாக்கும் தன்மைகள்  போன்ற விடயங்கள் தொடர்பில்  பொது மக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 23இன் கீழ் இரண்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

 சீனா  இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இவ்வருட இறுதிக்குள் வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று  ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. தற்காலச் சூழலில் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து தன் விடயங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இயலுமானதொரு நிலை இருப்பினும்  அந்த நாட்டில் நட்டங்கள் அதிகரித்தால்  இன்னொரு நாட்டுடன் உடன்படிக்கைகள் செய்துகொண்டு இலாபத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில்  எந்தவொரு உடன்படிக்கையையும் ஆளும் கட்சி நல்லது எனக் கூறினால்  எதிர்க் கட்சியானது அதனை தீமையானது என்றே கூறுவது வழக்கம். 

பொதுவாக எந்தவொரு நாடும் அபிவிருத்தி அடைந்த அல்லது  அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றினை மேற்கொள்ளும் போது  அது தொடர்பில் அறிவார்ந்த மதிப்பீடொன்றை மேற்கொள்வதுடன்  அது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தகவலறியும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்  எமது நாட்டு மக்கள் இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளக் கூடாது என்ற விதிமுறைகள் ஏதும் இருக்கின்றனவா? 

இவ்வாறான உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக  ' எட்கா' ஒப்பந்தம் தொடர்பில்  எமது நாட்டில் பெரும்பாலான மக்களிடையே அதற்கு முரணான கருத்துக்களே காணப்படுவதாகத் தெரிய வருகிறது. எனவே  இத்தகைய உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில்  இவ்வாறான உடன்படிக்கைகள் மூலம் ஏதேனும் நட்டமேற்பட்டால் அந்த நட்டத்தை ஈடு செய்ய வேண்டியவர்கள் எமது மக்களே.

இதற்கு முன்பதாக மசகு எண்ணெய் தொடர்பில் உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு  உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்த நிலையிலும் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த விலைக்கே மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டதாகவும்  'ஹெஜின்' ஒப்பந்தம் மூலம் எமது நாட்டுக்கு சுமார் 7000 கோடி ரூபா நட்டமேற்பட்டதாகவும் ஏற்கனவே ஊடகங்களின் மூலமாக அறியக் கிடைத்துள்ளன. எனவே  நாங்கள் மேற்கொள்ளப்போகின்ற உடன்படிக்கைகள் எமது நாட்டுக்கும்  எமது மக்களுக்கும் எந்தெந்த வழிவகைகளில் நன்மை பயக்கும் என்பதனை ஆராய்ந்து  அது தொடர்பில் எமது மக்கள் அறிவுறுத்தப்படல் வேண்டும்.

அந்த வகையில்  எதிர்பாராத வகையில் எமது நாட்டுக்கு நட்டம் அல்லது பாதிப்பு ஏற்படுமானால் இந்த உடன்படிக்கைகளிலிருந்து விலக முடியுமா? ஒப்பந்தங்கள் நடைமுறையாகும்போது ஏற்படக்கூடிய இடைக்கால பெறுபேறுகள்  என்ன? இவை மக்களுக்கு எந்தளவிற்கு நன்மையானவை? இவை எமது மக்களுக்குப் பாதிப்பை உண்டு பண்ணக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா? இவை எமது நாட்டின் ஏனைய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைப் பட்டியலுடன் எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்? போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதன்போது  சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சபையில் .பிரசன்னமாகியிருக்காதன் காரணத்தால் நாளைய தினம்(இன்று) பதிலளிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.