எம்.மனோசித்ரா

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமன்வில பொலிஸ் பிரிவில் தமன்வில - வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பிரதேசத்தில் தமல்வில பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று முன்னால் சென்று கொண்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேனுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த இரு இளைஞர்களும் தமன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 19 வயதுடைய உடமத்தல மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். விபத்துடன் தொடர்புடை வேன் மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளார். தமன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் மினுவாங்கொடை 18 ஆம் கட்டை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று முறிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த அதிவேக வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொவிபுற பொலிஸ் பிரிவில் முதுகண்டிய பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த பிரிதொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த நால்வர் சியம்பலான்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஆவார். விபத்து தொடர்பில் கொவிபுற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.