ம.ரூபன்

யுத்தம் இடம்பெறும் நாடுகளில் விமானக்குண்டு வீச்சில் வைத்தியசாலைகளும் தாக்கப்படுவது வழமை.பின்னர் தவறுதலாக இடம்பெற்றதாக கூறுவர்.

1971 ஏப்ரல் ஜே.வி.பி.ஆயுதப்போராட்டத்திலும் தெற்கில் மருத்துவமனைகள் பாதிக்கப்படவில்லை.1977 ஆகஸ்ட் யாழ்.நகரில் சில பொலிசாரின் வன்முறைகளின்போதும்,1981 மே பொது நூலகம் வர்த்தக நிலையங்கள் ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்களாலும்,சீருடையினராலும் எரிக்கப்பட்ட நேரத்திலும் நகரில் பொது மக்கள் யாழ்.வைத்தியசாலையே பாதுகாப்பானது என அச்சமின்றி தஞ்சம் புகுந்தனர். ஆனால் வன்முறையாளர்கள் எவரும் இவ்வைத்தியசாலைக்குள் நுழையவில்லை. 

1985 -1987 இல் ஒல்லாந்தர் கோட்டைக்குள் இலங்கை இராணுவ முகாம் இருந்தபோதும் போராளிகளுடனான மோதலில் யாழ்.நகரை நோக்கி ஏவிய (ஷெல்) எறிகணைகள்,யாழ்.வைத்தியசாலைக்குள் விழுந்து வெடித்து பல நோயாளர்கள் பலியானதை  இந்தியா கண்டித்திருந்தது.இதனால் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு இதனை மாற்றுவதற்கு ஜே.ஆர்.அரசு முடிவு செய்து 1987 ஏப்ரல் 27 சுகாதார அமைச்சினால் யாழ்.வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.1987 மே 'வடமராட்சி ஒப்பரேசன்'படை நடவடிக்கை, ஜூன் 4 இந்திய விமானங்கள் உணவுப்பொதிகளை போட்டமை அதனையடுத்து இலங்கை இந்திய ஒப்பந்த பேச்சுக்களும் ஆரம்பமாகவே  இதனை இடமாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

1987 ஜூலை இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணம் வந்த பின்னர்,இந்திய செஞ்சிலுவை அதிகாரிகள்,இந்திய பத்திரிகையாளர்கள் யாழ்.வைத்தியசாலையை பார்வையிட்டனர்.இந்திய படை வருவதற்கு முன்னர் இலங்கை படையின் யுத்த காலத்தில் யாழ்.வைத்தியசாலையின் பணிகளையும்,மருத்துவர்கள் மற்றும் சகல தரப்பு ஊழியர்களையும் பாராட்டினர்.1987 ஒக்டோபர் 10 இல் புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.

கொக்குவில்- பிரம்படி லேன் பகுதியில் ஒக்டோபர் 12 இல் இந்திய இராணுவத்தால் 53 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் யாழ்.வைத்தியசாலை சம்பவம் இடம்பெற்றது.

ஒக்டோபர் 21 தீபாவளித்தினம்.பட்டாசு வெடிச்சத்தங்கள் கேட்கவேண்டிய யாழ்.நகரப்பகுதி குண்டு சத்தங்கள்,வெடிச்சத்தங்களால் அதிர்ந்தது.யாழ். கோட்டையில் இருந்த இந்திய படையினர் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டும், சுட்டுக்கொண்டும், ஹெலிக்கப்டரில் இருந்து சுட்டும் நகரை  நோக்கி முன்னேறி பஸ் நிலையப்பகுதியை அடைந்தனர்.காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தனர்.நகருக்கு அப்பால் இந்திய படையினரின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களும்,தாதியரும்,ஊழியர்களும்  துரிதமாக செயற்பட்டனர்.

பிரதான வாசலில் வந்த இந்திய படையினர்,சகலரையும் உள்ளே போகுமாறு கூறி, கிறனேட்டை வீசியும்,சுட்டுக்கொண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்தனர்.எதிரே காணப்பட்டவர்களை எவர் என்றும் பாராது,எதுவித கேள்வியும் கேட்காது  மிருகங்களை வேட்டையாடுவதுபோலவே சுட்டனர்.

வைத்தியசாலைக்குள் ஒரே வெடிச்சத்தங்களும்,குண்டுச்சத்தங்களும் கேட்டவண்ணம் இருந்தன.மருத்துவர்கள் பரிமேலழகர்,சிவபாதசுந்தரம், கணேசரட்னம் மூன்று தாதியர்கள்,மேற்றன் உட்பட சக ஊழியர்கள்,விடுதியில் (Ward) தங்கி சிகிச்சை பெற்ற நோயாளர்கள்,அவர்களின் உதவிக்கு இருந்தவர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இராணுவம் துப்பாக்கிகளை நீட்டியபோது  சீருடையில் நின்ற மருத்துவர்களும்,தாதியர்களும் தம்மை அடையாளப்படுத்தினர்.சரண்டைவதாக கூறியும்  விட்டுவைக்கவில்லை.பலர் அங்குமிங்கும் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டனர். மருத்துவமனை பின் வாசலால் சிலர்  தப்பி ஓடினார்கள்.எங்கும் இரத்தம்.

ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலம்.சிலர் இறந்தவர்களைப்போல சடலங்களுடன் கிடந்து தப்பினார்கள்.மறுநாள் இச்சடலங்களை தப்பியவர்கள் உதவியுடன் மரங்கள்,ரயர்களை போட்டு எரித்தனர்.வன்னி இறுதிப்போரைப்போலவே இவர்களும் காணாமல் போய்விட்டனர்.அன்று உயிர் தப்பிய பலர் நேரில் கண்டவற்றை கூறுகின்றனர்.

இலங்கை அரசும் இதனை கண்டித்தது.எதிர்க்கட்சித்தலைவர் அனுர பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் கவனத்துக்கு  கொண்டுவந்தார்,பிரதம நீதியரசரசர் சர்வானந்தாவின் வயதான சகோதரியும்,கணவனும் இந்திய படையினரால் கொல்லப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.இந்திய பத்திரிகைகளில் இது குறித்த செய்திகள் வரவில்லை.நவின ஊடகங்கள்,இணையத்தளங்கள் இருந்திருந்தால் இக்காட்சிகளை கண்டிருக்கலாம்.இந்திய படையினருக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்டபோது இடையில் சிக்கிய பொதுமக்களே உயிரிழந்ததாக இந்திய அமைதிப் படையின் தளபதி லெப்ரினன்ற் ஜெனரல் திபேந்தர் சிங் கூறியிருந்தார்.வைத்தியசாலைக்குள் இருந்து புலிகள் தாக்கியதாகவும் தெரிவித்தனர்.

(NESoHRNorth  East Secretariat on Human Rights) என்ற நோர்வேயின் அனுசரணை மனித உரிமைகள் அமைப்பு 2002 இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ்.வைத்தியசாலையில் மருத்துவர்கள்,தாதிமார்,ஊழியர்கள்,நோயாளிகள்,பார்வையாளர்கள் என 135 பேர் இந்திய படையால் படுகொலை செய்யப்பட்டனர் எனத்தெரிவித்துள்ளது.

1989 இலங்கையை விட்டு இந்திய அமைதிப்படை வெளியேறும்வரையும் இத்துயர நிகழ்வை எவருமே நினைவு கூருவதில்லை.அதன் பின்னரே ஆண்டு தோறும் மருத்துவமனை பணியாளர்களும்,உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.2009 முள்ளிவாய்க்கால் இலங்கை அரசுக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னரே இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய அழித்தொழிப்புக்கள் தொடர்பில் சரியான பதிவுகளோ, தகவல்களோ, கணக்கெடுப்புக்களோ இதுவரையில் உரிய முறையில் வெளிவரவில்லை.பலர் இச்சம்பவங்கள் குறித்து எழுதியுள்ளனர்.நூல்களும் வெளியிடப்பட்டன.