(ஆர்.ராம்)

தனது அதிகாரத்திற்கு உட்பட வகையில் வடமாகாண மக்களின் உடனடியான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அவற்றை எழுத்துமூலமாக ஒப்படைக்குமாறும் கோரியுள்ளார்.

வட மாகாண ஆளுனராக ஜீவன் தியாகராஜா | Virakesari.lk

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (19 ) மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள அதிமூத்த அரசியல் தலைவரான சம்பந்தனை மரியாதை நிமித்தம் நான் சந்தித்திருந்தேன். நீலன் திருச்செல்வத்துடன் பணியாற்ற ஆரம்பித்த காலமான 1983ஆம் ஆண்டியிலிருந்து சம்பந்தனையும் நான் அறிவேன்.

அந்த அடிப்படையில் அவருடனான சந்திப்பின்போது அவருடைய உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக கேட்டறிந்து கொண்டேன்.

தொடர்ந்து வடக்கு மாகாண விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியதித்துள்ள நிலையில் அங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ள விடயங்கள் பற்றி அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

அச்சமயத்தில் வடக்கு மக்களுக்கு தேவையான உடனடியான விடங்கள் சம்பந்தமாக சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார்.

அந்த விடயங்களை என்னுடன் எழுத்துமூலமாக பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடத்தில் கோரியுள்ளேன். விரைவில் அதனை ஒப்படைப்பார் என்று நம்புகின்றேன்.

மேலும், வடமாகாணத்தின் மீள் எழுச்சி தொடர்பில் எனது அதிகாரத்திற்கு உட்பட்ட விடயங்களை நிச்சயமாக முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதையும் அவரிடத்தில் கூறியுள்ளேன். அதற்கு வரவேற்பைத் தெரிவித்த சம்பந்தன் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் என்றார்.