(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

இலங்‍கை, பங்களா‍தேஷ், மாலைத்தீவு, சீசெல்ஸ் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு கிண்ண கால்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இதுபோன்றதொரு சர்வதேச போட்டித் தொடரொன்று இலங்கையில் நடத்தப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். 

இப்போட்டித் தொடரில் சம்பியனாகும் அணிக்கு 5,000 அமெரிக்க டொலர் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளதுடன், இப்போட்டித் தொடரில் பங்கேற்பதாக மூன்று  வெளிநாடுகளும் உறுதியளித்துள்ளன.

லீக் சுற்றின் அடிப்படையில் நடத்ப்படும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிடும். லீக் நிறைவில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெறும் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இப்போட்டித் தொடரின் சகல போட்டிகளும் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடத்தப்படவுள்ளது. லீக் போட்டிகள் நவம்பர் மாதத்தின்  8 ஆம், 11 ஆம், 14ஆம்  திகதிகளிலும் இறுதிப் போட்டி  நவம்பர் மாதம் 17 ஆம் திகதியன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைவரும் 'பயோ பபிள்' முறையில் ஈடுபடுத்தப்பட்டு இப்போட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.