(எம்.மனோசித்ரா)

அரிசியை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் இலகுவாக எடுக்கவில்லை. அரிசி மற்றும் நெல் என்பவற்றுக்கான நிர்ணய விலையை சமநிலைப்படுத்துவதன் ஊடாக நுகர்வோருக்கு நன்மைகளை ஏற்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சில உயர் சக்திகளால் அரிசி விலை அதிகரிக்கப்பட்டாலும், நெல்லுக்கான விலை அதிகரிக்கப்படாமையால் நுகர்வோரைப் போன்றே விவசாயிகளும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே தான் நாட்டில் இந்த நிலைமையை சமநிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இது இலகுவாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. நுகர்வோரின் நன்மை கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி தொடர்பில் எவ்வித கடன் யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசிக்கான பணத்தை செலுத்தி அதனை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.