(எம்.எம்.சில்வெஸ்டர்)

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில்  19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் இறுக்கமான வெற்றியைப் பெற்றது.  இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இன்றைய தினம்  நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக சதீஷ் ஜயவர்தன(58), பவன் பத்திராஜ (51) அரைச்சதம் அடித்தனர்.

இவர்களைத் தவிர ஷெவோன் டேனியல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், சமிந்து விக்கிரமசிங்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 17 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் சார்பில் ரிப்பொன் மொண்டல் 3 விக்கெட்டுக்களையும், அசிக்குர் ஸமன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த ஜோடி தமக்கிடையில் 10.4 ஓவர்களில் 57 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இப்திக்கார் ஹொசைன் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சீரான இடைவெளிகளில் பங்களாதேஷ் அணி விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், மறு பக்கத்தில் வெற்றி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தனர்.

41.2 ஓவர்களில் 187 க்கு 6 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் இருந்த பங்களா‍தேஷ், 212 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

இறுதி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அசிக்குர் ஸமன், ரிப்பொன் மொண்டல் இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினர். கடைசி ஓவரை மதீஷ பத்திரண வீசியிருந்தார். இந்த கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையென்ற நிலையில் இருந்ததது. 

அசிக்குர் முதல் பந்தை பவுண்டரிக்கு அடிக்கவே, 5 பந்துகளில் 4 ஓட்டங்கள் என்றிருந்தபோது அடுத்த பந்து 'வைட்டாக'   வீசப்பட ஒரு ஓட்டம் உதிரியாக பங்களாதேஷுக்கு கிடைத்தது. இதையடுத்து அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது.  

இவ்வாறு ஒரு விக்கெட் தேவையென்ற நிலையில் இலங்கையும்,  4 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவையென்ற  நிலையில் பங்களாதேஷும் இருந்தன. ஓவரின் மூன்றாவதாக வீசப்பட்ட பந்தில் ஒரு ஓட்டத்தை பெற முயன்றவே‍ளையில், ரிப்பொண் மொண்டல் ஆட்டமிழக்கவே 19 வயதுக்குபட்ட இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் 'திரில்' வெற்றியை பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் துனித் வெல்லாலகே, மத்தீஷ பத்திரண இருவரும் தலா 3  விக்கெட்டுக்களையும்,ட்ரெவின் மெத்தியூ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முன்னிலை பெற்றது. இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதியன்று நடைபெறும்.