(இராஜதுரை ஹஷான்)

உர பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். 

விவசாயிகளை அடிப்படையாகக்கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற்கொண்டு இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டது. 

தேசிய மட்டத்தில் சேதன பசளை உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சேதன பசளை உரத்தை பயன்படுத்தி ஒரு சில பகுதிகளில் சிறந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளன.

உரபிரச்சினையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என்பதை பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் சார்பில் உறுதியாக குறிப்பிடுகிறேன்.

விவசாயிகளின் பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். 

தேசிய உற்பத்திகளை இல்லாதொழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. விவசாயிகளினது நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என்றார்.