(இராஜதுரை ஹஷான்)

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூல கூறுகள் அடங்கிய விசேட திரவ உரத்தின் ஒரு தொகுதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. 

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான திரவங்கள் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும்  என  உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குப்படுத்துகை இராஜாங்க அமைச்சர்  மொஹான் தி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீற்றர் விசேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விசேட திரவம் இன்று இறக்குமதி செய்யப்படவுள்ளது.

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட் உரம் தற்போது நாடு தழுவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இரசாயன உரத்தை தற்போதைய நிலையில் இறக்குமதி செய்வது சாத்தியமற்றதாகும் என்பதை விவசாயிகள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சேதன பசளையை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமாகும். விவசாய நடவடிக்கையினை புறக்கணித்தால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள்.

பெரும்போக விளைச்சலில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் அதற்குரிய நட்டஈட்டை வழங்கும் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். சேதன பசளை உற்பத்திக்காக 7500 ரூபா ஊக்கவிப்புத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

சேதன பசளை பயன்பாடு சவால்மிக்கதாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.தோற்றம் பெற்றுள்ள பிரச்சினையைக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.