(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான 6000 ரூபா மாதாந்த இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதியை அடுத்த ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யுமாறுகோரி காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோவினால் கையெழுத்திடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

நாடளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கெனக் கடந்த 2019 ஆம் ஆண்டில் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் மற்றும் சிவில் யுத்தம் ஆகியவற்றின்போது காணாமல்போனமையை உறுதிப்படுத்தி 'காணாமல்போனமைக்கான சான்றிதழைப்' பெற்றிருக்கக்கூடிய குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாவை இடைக்காலக்கொடுப்பனவாக வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 திகதி அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டது. 

அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் 'மரணச்சான்றிதழைப்' பெற்றிருக்கக்கூடிய குடும்பங்களுக்கும் அந்த இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரமளிக்கப்பட்டது.

எமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி 'காணமல்போனமைக்கான சான்றிதழைப்' பெற்றிருக்கூடிய 153 குடும்பங்களுக்கு 2019 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் மேற்படி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதிலும், அதன் பின்னரான காலப்பகுதியில் எந்தவொரு குடும்பத்திற்கும் இந்த இடைக்காலக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை. 

அதுமாத்திரமன்றி 'மரணச்சான்றிதழைப்' பெற்றிருக்கக்கூடிய எந்தவொரு குடும்பத்திற்கும் 6000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

இடைக்காலக்கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் எமது அமைப்பினால் நீதியமைச்சுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போதுவரை அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

 

1989 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது தெற்கில் காணாமல்போனோருக்காக முன்நின்று செயற்பட்டவரும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் 

இழப்பீட்டுக்கான அலுவலகத்தினால் காணாமலாக்கப்பட்ட அனைவருக்குமான நியாயமான இழப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்படும் வரையில், இருவருடகாலத்திற்கு வழங்குவதற்கு ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதன்படி அந்த இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கான நிதியை எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யுமாறும் கோருகின்றோம். 

அதுமாத்திரமன்றி இதுகுறித்து உங்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறும கோரிக்கைவிடுக்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.