உலகின் மிக பழமையான நட்சத்திர வரைபடம் என்று அறியப்படும் ஓர் அற்புத பழம்பொருள், பிரிட்டன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நெப்ரா ஸ்கை டிஸ்க் என்று அழைக்கப்படும் அப்போருள், சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், அது வெண்கல காலத்தைச் சேர்ந்தது என்றும் நம்பப்படுகிறது.

இந்த வட்ட வடிவிலான பொருள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து எடுக்கப்பட்டது. இது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இப்பொருளின் கண்டுபிடிப்பு கூட சர்ச்சைக்குள்ளானது. சில அறிஞர்கள் அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்த வட்டத் தகடு, முந்தைய காலத்திலேயே மனிதர்களுக்கு வானியல் துறையில் இருந்த தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என யுனெஸ்கோ கூறுகிறது.

மேலும் இந்த நெப்ரா வட்டத்தகடை உலகின் முக்கியமான வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் பட்டியலிட்டுள்ளது.

இந்த வட்டத்தகடு ஜெர்மனியில் நெப்ரா நகருக்கு அருகில் வெண்கல காலத்தைச் சேர்ந்த வாள்கள், கோடரிகள், பிற பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பொருட்கள், இரு சட்டவிரோத புதையல் வேட்டைக்காரர்களால் மெட்டல் டிடெக்டரைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் பொலிஸாரினால் அப்பொக்கிஷங்கள் மீட்கப்பட்டது.