வடக்கு, கிழக்கு மாகாண விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதேச ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் கோரி  மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் உள்ள கமநலசேவை நிலையங்களுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளாவெளி, கொக்கட்டிச்சோலை, ஆயித்தமலை, வந்தாறுமூலை மற்றும் கிரான் ஆகிய இடங்களில் விவசாயிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பூரண ஆதரவுடன் இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் உரப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

கொள்ளாதே கொள்ளாதே விவசாயிகளை கொள்ளாதே, கொள்ளாதே கொள்ளாதே பட்டினியால் கொள்ளாதே, அடிக்காதே அடிக்காதே விவசாயின் வயிற்றில் அடிக்காதே,வேண்டும் வேண்டும் உரம் வேண்டும், அபிவிருத்தி குழுத் தலைவரே உரத்தைத் தா, இராஜாங்க அமைச்சரே உரத்தைத் தா, கோட்டா அரசே உரத்தைத் தா என்பன போன்ற கோஷங்களை எழப்பியவாறு கிரான் பிரதான வீதியில் அமைந்துள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ப.அரியநேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், கி.துரைராஜசிங்கம், மாநகர மேயர் சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் விவசாயிகளும் பங்கேற்றனர்.