நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'லத்தி’ சார்ஜ் என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் A. வினோத் குமார் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'லத்தி சார்ஜ்'. 

இதில் 'புரட்சி தளபதி' விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். நடிகர் விஷாலின் நண்பர்களும், நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளாக பணியாற்றுபவர்களுமான நந்தா மற்றும் ரமணா இணைந்து, ராணா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கி, இந்த படத்தை தயாரிக்கிறார்கள். 

இந்தத் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஒரு தருணத்தில் தயாராகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு  இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

'லத்தி’ சார்ஜ் என்ற பெயரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் லுக்கிற்கான பிரத்யேகமான டீசர் இரசிகர்களை கவர்ந்திருப்பதால் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'எனிமி' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகிவரும் 'வீரமே வாகை சூடும்' வெளியாகும் என்றும் திரையுலகினர் தெரிவிக்கிறமை என்பது குறிப்பிடத்தக்கது.