பெற்றோர்களே அவதானம் ! சிறுவர்களுக்கு ஏற்படும் புதிய நோய் குறித்து வைத்தியர் நளின் கித்துல்வத்தவின் எச்சரிக்கை !

By T Yuwaraj

18 Oct, 2021 | 11:11 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு 2 - 6 வாரங்களின் பின்னர் மீண்டும் காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, கண்கள் சிவத்தல், வாந்தி, வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது வைத்தியரை நாடுமாறு கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கித்துல்வத்த தெரிவித்தார்.

சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் ! அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள்  : இருவர் பலி | Virakesari.lk

கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பில் விளக்கமளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) தொடர்பில் தற்போது பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

காரணம் இது புது வகையாக நோய் ஆகும். இலங்கையில் இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இந்நோய் இனங்காணப்பட்டது.

கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 80 சிறுவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று ஏற்பட்டு 2 - 6 வாரங்களின் பின்னர் இந்த நோய் ஏற்படுகிறது. கொவிட் தொற்றின் பின்னர் குறித்த காலப்பகுதியில் மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வௌவேறு நோய் அறிகுறிகள் இதன் போது ஏற்படும்.

அதாவது காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி, வாந்தி, வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தீவிரமடைந்து காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் சத்திர சிச்சைகள் கூட முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தளவிற்கு கடுமையான வயிற்று வலி இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும்.

முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொண்டால் இந் நோயை நூறு வீதம் குணப்படுத்த முடியும். எனவே தற்போது பிள்ளைகளுக்கு காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி, உடல் வலி, கண்கள் சிவத்தல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு பெற்றோரை அறிவுறுத்துகின்றோம்.

அத்தோடு கிடைக்கப் பெறும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்துகின்றோம். இவற்றை பின்பற்றினால் இந்த அபாயம் மிக்க புதிய நோய் நிலைமையிலிருந்து எம்மால் சிறுவர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right