மீண்டுமொரு கொவிட் அலை ஏற்பட வாய்ப்புள்ளது : விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா எச்சரிக்கை

By T Yuwaraj

17 Oct, 2021 | 09:36 PM
image

 (எம்.மனோசித்ரா)

நாட்டில் பெற்றோர்களில் பெருமளவானோர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் , மாணவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெறவில்லை. இவ்வாறான நிலையில் விடுமுறை நாட்களில் பாதுகாப்பற்ற பயணம் என்பவற்றின் மூலம் மீண்டுமொரு கொவிட் அலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

மே 31 வரை பயணிகள் நாட்டுக்குள் வரத்தடை ; 170 கர்பிணிகளுக்கு தொற்றுறுதி |  Virakesari.lk

எனவே இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

விடுமுறை தினங்களில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தொடர்ச்சியான விடுமுறை தினங்கள் வருவதால் பெரும்பாலானோர் மாகாணங்கக்கிடையில் பயணிக்கும் வீதம் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான பயணங்களின் போது மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம். அதற்கமைய கொவிட் வைரஸ் இலகுவாக பரவக் கூடிய இடங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

விரைவில் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் வெளியிடங்களுக்குச் செல்வதால் மாணவர்களுக்கு எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு அல்லது கொவிட் தொற்று ஏற்பட்டால் பாடசாலை செல்வது மீண்டும் தாமதமடையக் கூடும். மீண்டுமொரு அலையும் ஏற்படக் கூடும்.

காரணம் பெற்றோர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் மாணவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right