இழுவைப்படகு தடைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரி முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையில் கடல் வழியாகவும், விவசாயிகள்முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து கமநல சேவை திணைக்களங்களின் முன்னாலும் இன்றும் நாளையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. 

கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய தரப்பினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கதாயினும், இந்தப்போராட்டங்களுக்கான அறிவிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தற்துணிவில் எடுக்கப்பட்டதாகவே உள்ளது. 

கண்டாவளையில் உள்ள தனது பூர்வீகக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் விவசாயிகளைச் சந்தித்த சுமந்திரன் ஒருங்கே கடற்றொழிலாளர்களையும் சந்தித்திருந்தார். இந்தச்சந்திப்புக்களின் பின்னர் யாழ்.இந்திய துணைத்தூதுவரையும் சந்தித்திருந்தார். அதனையடுத்தேபோராட்டங்களுக்கான அறிவிப்பினைச்செய்திருந்தார். 

எனினும், சுமந்திரன்போராட்டங்களுக்கான அறிவிப்பினைச் செய்தபோது அது கூட்டமைப்பினதாகவோ அல்லது தனியே இலங்கை தமிழரசுக்கட்சிக்கானதாகவோ சுட்டிக்காட்டியிருக்கவில்லை. அதேபோன்றுசுமந்திரன் போராட்ட அறிவிப்பினைச் செய்தவுடன் சாணக்கியனும் தனது பங்கிற்கான ஆதரவுக்கர அறிவிப்பினைச் செய்தார். 

அவர் அவ்விதமான ஆதரவுக்கர அறிவிப்பினைச் செய்வதற்கு முன்னதாக மட்டக்களப்பிலோ அல்லது கிழக்குமாகாணத்திலோ உள்ள கூட்டமைப்பினதோ அல்லது தமிழரசுக்கட்சியினதோ உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசித்திருக்கவில்லை. 

இவ்விதமான நிலைமைகளால் இந்தப் போராட்டங்கள் தனியே சுமந்திரன், சாணக்கியன்மற்றும் அவர்கள் ஆதரவு அணியினரின் இணையில் நடைபெறுகின்றது என்ற தோற்றப்பாடு எழுந்திருந்தது. 

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தவைர்களும் இந்த விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார்கள். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை கூட ஆரம்பத்தில் அவ்விதமான கருத்தினையே பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசி வாயிலாக பகிர்ந்துள்ளார். 

மாவையின் ஆதங்கம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வழி சுமந்திரனின் காதை எட்டவும் சுமந்திரன் மாவையைத் தொடர்பு கொண்டு தெளிவு படுத்தல்களைச் செய்துள்ளார். அதுமட்டுமன்றி அவசர அவசரமாக வெள்ளிக்கிழமையன்று மெய்நிகர் சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.