(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் நாட்டில் வறுமை நிலை 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

வெகுவிரைவில் முழுப் பொருளாதாரமும் சரிவடையக் கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளமையை ஆளுந்தரப்பு உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார். 

டிசம்பர் மாதமளவில் இந்த நிலைமையை நேரடியாக அவதானிக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17 ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இதற்கு முன்னர் எந்தவொரு ஆட்சி காலத்திலும் வருமை நிலை குறுகிய காலத்திற்குள் இவ்வாறு அதிகரிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் என சகல ஆட்சி காலத்திலும் இலங்கையில் வருமை நிலை 4.2 - 4.5 சதவீதமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது இது 7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

அதாவது இதற்கு முன்னைய ஆட்சி காலங்களில் வறுமையில் இல்லாத மக்களைக்கூட இந்த அரசாங்கம் வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளது. 

வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இருப்பு அத்தியாவசியமாகும்.

ஆனால் தற்போது இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கை மத்திய வங்கியில் அந்நிய செலாவணி இருப்பு எதிர்மறையாகக் காணப்படுகிறது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இது முதலாவது சந்தர்ப்பமாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் இறக்குமதிக்கு தேவையான டொலரின் கையிருப்பை விட 400 மில்லியன் டொலர் மேலதிகமாக தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெகுவிரைவில் பொருளாதாரம் முழுமையாக சரிவடையக் கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளதாக அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 

இந்த பட்டியலில் இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆறாவது இடத்திலேயே காணப்பட்டது. எனினும் தற்போது முதலாவது இடத்திற்கு வந்துள்ளது.

அதற்கமைய ஏற்கனவே நாம் கூறியதன் படி டிசம்பர் மாதமாகும் போது இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்து விடும்.

இரசாயன உர பாவனையை இடைநிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த தீர்மானம் சேதன உரப்பாவனையை ஊக்குவிப்பதற்காக அல்ல. உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இன்மையே இந்த தீர்மானத்திற்கான காரணமாகும். 

இலங்கைக்கு பெருமளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தேசிய உற்பத்தி உரப்பற்றாக்குறையின் காரணமாக 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவு பொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் இதுவே பிரதான காரணியாகும். 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி நிறுவனங்கள் அவற்றின் தேவைக்கு ஏற்றவாறு எதிர்பாராதளவிற்கு பால்மாவின் விலையை அதிகரித்துள்ளன. 

இதன் காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் மந்த போசனை அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

எனவே பால்மா இறக்குமதியில் நெருக்கடி நிலைமை காணப்பட்டால் உள்நாட்டில் பால் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். 

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் அல்லது கடன் சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இன்றி மக்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.