(ஆர்.யசி)

இழுவைப்படகு முறைமையை தடைசெய்யும் அதேபோல் சட்டவிரோத கடல் எல்லையை கடக்கும் மீன்பிடி சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும்கூட இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படாதமை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக நாசமாக்கியுள்ளது.

எனவே உடனடியாக மீன்பிடி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இது குறித்து கூறுகையில்,

இந்திய மீனவர்களின் அத்து மீறிய இழுவைப்படகு மீன்பிடிக்கு எதிராக சட்ட நடைமுறைகளை கையாளுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையிலான மீனவர்களுக்கு நீதி கோரிய போராட்டம் இன்று இடம்பெற்றது என்றார்.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

இழுவை படகுகளுக்கு எதிரான போராட்டமானது, மீனவர் சமூகம் பல காலமாக செய்துகொண்டுள்ள ஒரு போராட்டம்.

2010 ஆம்  ஆண்டுக்கு பின்னர் பல சங்கங்கள், மாவட்ட மீனவர் சங்கங்கள் அனைத்துமே ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் ஒரு மகஜரை கொண்டு வந்தனர்.

இழுவைப்படகுகளை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு அமைவாக அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை நாம் முன்வைத்திருந்த போதிலும் அது குறித்து அரசாங்கம் எந்தவித கரிசனையும் கொள்ளவில்லை. 

அதனைத் தொடர்ந்தும் தனிநபர் சட்டமூலம் ஒன்றினை நான் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தேன். ஆனால் அந்த பாராளுமன்ற காலம் முடிவடைகின்ற காரணத்தினால் கடந்த பாராளுமன்றத்தில் திரும்பவும் அதே சட்டமூலத்தை கொண்டுவர நேர்ந்தது.

அப்போது இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கோரி அமைச்சர் குழாமொன்று இந்தியாவிற்கு சென்றபோது, என்னையும் அதிலே சேர்த்து அனுப்பினார்கள். 

மீனவர் அமைச்சுக்களும் அதே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கமைய முதல் தடவையாக இந்திய அரசாங்கம் எம்முடன் சேர்ந்து இழுவைப்படகுகளை தடை செய்ய வேண்டும் என்ற கூட்டறிக்கையை வெளியிட்டனர். 

அதனை தொடர்ந்து எனது தனிநபர் சட்டமூலத்தை அரசாங்க சட்டமூலமாக ஏற்று அரசாங்கமே சட்டமாக்கியது. அதன்படி இலங்கை கடல் பிரதேசத்தில் எவராவது இழுவை மீன்பிடியில் ஈடுபட்டால் அதற்கு தண்டனை வழங்கப்படும் என்றும், அது தடைசெய்யப்பட்ட தொழில் முறையொன்று என அறிவிக்கப்பட்டது. 

அதேபோல் இலங்கையில் சட்டமாக்கப்பட்ட பின்னர், இந்தியாவும் ஒரு அறிவிப்பை விடுத்தது. இலங்கையில் இவ்வாறான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே மீனவர்கள் இலங்கை பரப்பிற்குள் போக வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த எச்சரிக்கை இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்த எச்சரிக்கை காரணமாக இரண்டு வருடங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்கு வரவில்லை. 

ஆனால் இப்போது மீண்டும் இழுவைப்படகுகள் பெருகிவிட்டன. இந்த இழுவை படகுகளுக்காக நாம் முன்னெடுக்கும் போராட்டம் வருங்கால சந்ததிக்கான போராட்டம். 

இழுவைப்படகுகள் மூலமான மீன்பிடி கடல் வளத்தை முழுமையாக அழிக்கும். இன்று இந்தியாவில் இந்த அழிவு  இடம்பெற்றுள்ளது. 

எனவேதான் இலங்கையில் எமது கடல் வளங்களை பாதுகாக்கவும் எமது மீனவர்களின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு இந்த முறைமையை கைவிடுமாறு வலியுறுத்துவதுடன், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கின்றோம். 

இந்த சட்டம் இயற்றப்பட்டாலும், எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களாக எமது மீனவர்கள் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் எமது மீன்பிடி உபகரணங்களை அழிப்பது குறித்து இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் வழங்கியுள்ளேன். 

மீன்பிடி சட்டம் இருந்தும் அதனை மீன்பிடித்துறை அமைச்சர் நடைமுறைப்படுத்தாது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. 

தடைசெய்யப்பட்ட தொழில் கைவிடப்பட வேண்டும். எமது மீனவர்களின் தொழிலுக்கு இடமளிக்க வேண்டும்.  இந்த விடயங்களுக்கு யாருக்கும் அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

மக்கள் சார்பில் ஒரு அறிவித்தல் கொடுத்தேன். கட்சி சார்பில் இவ்வாறான போராட்டம் எடுக்கின்றதாக கூறவில்லை. எனவே சகலரும் இதில் கலந்துகொண்டிருக்க வேண்டும். 

ஒரு சிலர் வந்துள்ளனர், அதற்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். அதேபோல் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சகலருக்கும் நன்றிகள் என்றார்.