(எம். எம். சில்வெஸ்டர்)

13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின்  சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி,நேபாள அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.இந்த வெற்றியின் மூலமாக தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் கிண்ண வரலாற்றில் இந்திய அணி 8 ஆவது தடவையாக கிண்ணத்தை வென்றெடுத்தது.

மாலைத்தீவின் மாலே நகரில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த 13 ஆவது தெற்காசிய இறுதியில் இந்திய மற்றும் நேபாள அணிகள் மோதிகொண்டன.

போட்டியின் ஆரம்ப முதல் இந்திய   அணி ஆக்ரோஷமாக விளையாடி கோல் போட எடுத்த முயற்சிகளை  நேபாள அணியினர்  முறியடித்தனர். இதனால்  போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை.

இரண்டாம் பாதியில் இந்திய அணி மாற்று யுக்திகளைப் பயன்படுத்தி விளையாடி இருந்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.போட்டியின் 49 வது நிமிடத்தில் இந்திய அணித்தலைவர்  சேஸ்த்திரி தனது  அணிக்கான முதலாவது கோலை போட்டு முன்னிலையிட்டார்.இந்த கோல் போட்டு மறு நிமிடத்தில் அணியின்  மத்தியகள வீரரான சுரேஷ் சிங்  கோலோன்றை  போடவே இந்திய அணி வலுவான நிலையை அடைந்தது.

போட்டி நிறைவடைவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில் அப்துல் சமத் தன் பங்குக்கு கோலொன்ற போட்டு  இந்திய அணியின் கோல் கணக்கை மூன்றாக உயர்த்தவே இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.