பந்துல, மஹிந்தானந்த மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

By T. Saranya

16 Oct, 2021 | 11:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்குவோம். அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் விவசாயிகள் பெரும்  பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நீர்கொழும்பு பகுதியில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விளைநிலங்களில் விவசாயம் செய்ய வேண்டிய விவசாயிகள் தற்போது வீதிக்கிறங்கி போராடுகிறார்கள்.உரம் இல்லாமல் விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினையினை எதிர்வரும் காலங்களில் முழு நாடும் எதிர்க் கொள்ள நேரிடும். அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

உரப்பிரச்சினைக்கு தீர்வு கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 பேர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றும் மிகுதியாகவில்லை. விவசாயிகள் பெரும் பாதிப்பை தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள்.

விவசாயிகள் தொடர்பில் அக்கறை கொள்ளும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு தீர்வாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும்.

மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டும்.போலியாக  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பதை விடுத்து இவ்விருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்தே அளுத்கமகே ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளும் தரப்பினர் கொண்டு வந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எம்மால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடியும்.ஆனால் வெற்றிப் பெறாது.ஏனெனில் ஆளும் தரப்பிடமே பெரும்பான்மை பலம் உள்ளது.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள். சிறுபோக விளைச்சலை போன்று பெரும்போக விளைச்சலும் பயனற்றதாகி விடபோகிறது. தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மறைமுகமாக தேசிய உற்பத்திகளை அழிக்கிறது.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right