(நா.தனுஜா)

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெறுமனே ஒருமாதகாலத்தில் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. தற்போதைய வாழ்க்கைச்செலவின்கீழ் 4 பேர்கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் அண்ணளவாக 61,900 ரூபா அவசியமாகின்றது.

இருப்பினும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 12,500 ரூபாவையோ அல்லது 23,000 ரூபாவையோ மாதாந்த ஊதியமாகப் பெறுகின்ற ஒருவரால் குடும்பமொன்றின் தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்யமுடியும்? அவ்வாறெனின், காலையில் தொழில்புரிந்து, இரவில் திருடுமாறு அரசாங்கம் கூறுகின்றதா? என்று தேசிய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவரும் அரச தாதியர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அண்மைக்காலத்தில் எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி அரசாங்கத்தினால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அடிக்கடி வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டாலும் சில நாட்களிலேயே அவை இரத்துச்செய்யப்படுகின்றன.

நடைமுறையில் அவற்றினால் எந்தவொரு பயனும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அதன்விளைவாக நாட்டுமக்கள் பொருளாதார ரீதியில் மிகப்பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஒருமாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் அரிசி, பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் அரிசிக்கான நிர்ணயவிலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அதுமாத்திரமன்றி அத்தியாவசியப்பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட்டத்தின் ஊடாக அரிசிமூட்டைகள் பதுக்கப்பட்டிருந்த இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

ஆனால் அதனைத்தொடர்ந்து அரிசிக்கான நிர்ணயவிலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டதுடன் அரிசி ஆலை உரிமையாளரான டட்லி சிறிசேனவினால் அரிசிக்கான விலைகள் தீர்மானிக்கப்பட்டன.

பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பின்னர் அவற்றின் விலைகளை அதிகரிக்கும் சூத்திரத்தையே அரசாங்கம் பின்பற்றிவருகின்றது.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது வெறுமனே ஒருமாதகாலத்திற்குள் பொருட்களின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. அதன்விளைவாக மக்களின் வாழ்க்கைச்செலவும் 40 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

தற்போதைய வாழ்க்கைச்செலவின்கீழ் 4 பேர்கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் அண்ணளவாக 61,900 ரூபா அவசியமாகின்றது. இருப்பினும் அரசாங்கத்தினால் தனியார்துறைக்கு 12,500 ரூபாவும் அரசதுறைக்கு 23,000 ரூபாவுமே ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, ஊதியமாக மேற்படி தொகையைப் பெறுகின்ற ஒருவரால் 61,900 ரூபா வாழ்க்கைச்செலவின்கீழ் குடும்பமொன்றின் தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்யமுடியும்? அவ்வாறெனின், காலையில் தொழில்புரிந்து, இரவில் திருடுமாறு அரசாங்கம் கூறுகின்றதா? என்று கேள்வி எழுப்பினார்.