(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் யோசனையாக உள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் மத்தியில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவரும், சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வரிசையில் காத்திருப்பதை போன்று இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது நாட்டுக்கு பேரிழப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.                                                                                             
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கல்வி, சுகாதாரம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைவடைந்து வருகிறதே தவிர அதிகரிக்கவில்லை. இவ்வாறன நிலையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தல் குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும் என்று குறிப்பிடும் அரசாங்கம் மறுபுறம் பழைய தேர்தல் முறைமை ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது. ஆகவே மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் இரட்டை நிலைப்பாடு நிலவுகிறது.

இவ்வருட இறுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சாத்தியமற்றதாகும். அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அது முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக அமையுமே தவிர அனைத்து இன மக்களின் அபிலாசைகளுக்கும் அமைவானதாக இருக்காது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவது சிறந்தது என சுதந்திர கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளார்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விலை நியாமற்ற வகையில் அதிகரிக்கப்படுகின்றன.மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வரிசையில் காத்திருப்பதை போன்று தற்போது இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

தற்போதைய அரசியல் மற்றும் சமூக, பொருளாதார நிலைமைகளின் வீழ்ச்சியை அறிந்து இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள். இது நாட்டுக்கு பெரும் இழப்பாகும். இதனை தடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.