(நா.தனுஜா)

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச்செல்லும் பெண்கள் மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளையுடைய தாய்மார்களால் பூர்த்திசெய்யப்படவேண்டிய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அதன்காரணமாக வெளிநாடுசெல்லும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்று பெண்களின் சுதந்திரம் தொடர்பான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

டொலர்களைச் சம்பாதிப்பதற்காகப் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் ஆட்சியாளர்கள், அப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தவறியமையினால் பலர் சவப்பெட்டிகளிலேயே மீண்டும் நாடு திரும்புகின்றார்கள்.

வருடாந்தம் நாட்டிற்குப் பெருமளவான வருமானத்தை ஈட்டித்தரும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்வதற்கு ஆட்சியாளர்கள் தவறியிருக்கின்றார்கள் என்றும் அந்த இயக்கத்தின் உறுப்பினர் சித்தாரா குலரத்ன தெரிவித்துள்ளார்.

டொலர்களைச் சம்பாதிப்பதற்காகப் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்புதல் குறித்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் இயக்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு எமது அமைப்பினால் தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், அவற்றுக்குரிய தீர்வை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் பெண்களில் 5 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளையுடைய தாய்மார் தொடர்பில் பூர்த்திசெய்யப்படவேண்டிய கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அத்தகைய தாய்மார் பொதுவாக தமது பிள்ளையை உரியவாறு பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ளக்கூடிய உறவினர்களுக்கான தேவைப்பாட்டைக் கொண்டிருப்பர். அதுமாத்திரமன்றி பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் கிராமசேவை அலுவலர், பிராந்திய செயலாளர் மற்றும் அரச முகவர் நிலையங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த பெண்களின் பிள்ளைகள் தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடியவர்களாக அவர்கள் இருக்கவேண்டும்.

எவ்வாறிருப்பினும் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் பெண்களின் விண்ணப்பப்படிவங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் ஒன்லைன் மூலம் கையேற்க ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறான பின்னணியில் வெளிநாடு செல்லும் தாய்மாரின் பிள்ளைகள் தொடர்பில் அரசின் பொறுப்பு நீக்கப்பட்டு, அது வெறுமனே வாய்மூல உத்தரவாதத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்விளைவாக அந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் வலுவானதாக இருக்கும்போதே அவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அவ்வாறிக்கையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அவர்களது நிலையென்ன என்பது சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

இலங்கையைச் சேர்ந்த பெருமளவான பெண்கள் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றார்கள். அவர்கள் பணிபுரியும் இடங்களில் வன்முறைகளுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுவது பற்றிய பல செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தன.

எனவே வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களது தொழில்சார் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு நாம் காலத்திற்குக்காலம் அரசாங்கத்திடமும் வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகத்திடமும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்திருக்கின்றோம். இதுகுறித்த பரந்தளவிலான விழிப்புணர்வு செயற்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். 

அவ்வாறிருப்பினும்கூட இந்நாட்டின் ஆட்சியாளர்கள் டொலர்களை சம்பாதிப்பதற்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு உரியவாறான பாதுகாப்பை வழங்குவதற்குத் தவறியிருக்கின்றார்கள் என்றே கருதுகின்றோம். குறிப்பாக பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பான கட்டுப்பாடுகள் வெறுமனே வாய்மூல உத்தரவாதமாகத் தளர்த்தப்பட்டமையினைக் கடுமையாக எதிர்க்கின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான தீர்மானங்களினால் டொலருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. வெளிநாட்டுப்பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் பெண்களால் இந்த நாடு வருடாந்தம் பெருமளவிலான டொலர்களை ஈட்டிக்கொள்கின்றது.

ஆனால் அவ்வாறு வருமானத்தை உழைத்துத்தரும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாததன் விளைவாக, அநேகமானோர் சவப்பெட்டிகளிலேயே மீண்டும் நாடு திரும்புகின்றனர்.

எனவே முதலில் வேலைவாய்ப்பிற்கான வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு அவசியமான மொழி, சட்டம், தொழில் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேவேளை அவர்கள் வெளிநாட்டிற்குச் செல்வதற்குப் பூர்த்திசெய்யவேண்டிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.