(நா.தனுஜா)

பல சந்ததிகள் கடந்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்கள் அடங்கியிருப்பதாக இனங்காணப்பட்ட சீனாவின் உரம் ஏற்றப்பட்ட கப்பல், இன்னும் 10 - 12 நாட்களில் மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளது. அந்தக் கப்பலை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்புவதில் சீனா ஏன் முனைப்புடன் இருக்கின்றது? ஏனெனில் அத்தகைய தீங்கேற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளை எமது நாட்டின் நிலத்திற்குள் உட்செலுத்தவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. அதன்மூலம் நாட்டின் தேயிலைச்செய்கையை முழுமையாகச் சீர்குலைத்து, தேயிலைச்செய்கையில் தலைசிறந்த முதன்மை நாடாக மாறுவதற்கு சீனா முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விவசாயிகளும் ஏனைய பயிர்ச்செய்கையாளர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி விவசாயத்துறை பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இதுகுறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்கும் இப்பிரச்சினைக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கும் விவசாயத்துறை அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விவசாயத்துறை அமைச்சர் ஜனாதிபதிக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான பாலமாகத் தொழிற்படுவதைவிடுத்து, 'சேதனப்பசளை உற்பத்தி' என்ற எண்ணக்கருவைப் பயன்படுத்தி, அதில் தனக்கு நெருக்கமானவர்களைப் பெருவியாபாரிகளாக்கி இலாபமடைவதற்கு முற்படுகின்றார்.

அதுமாத்திரமன்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் தீங்குவிளைவிக்கக்கூடிய 'எர்வீனியா' என்ற பற்றீரியா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்தக் கப்பல் திருப்பியனுப்பப்பட்டது. இருப்பினும் சீனாவின் இராஜதந்திர ரீதியான அழுத்தங்களுக்கு அடிபணிந்து, சிங்கப்பூருக்குத் திருப்பியனுப்பப்பட்ட அந்தக் கப்பல் இன்னும் 10 - 12 நாட்களில் மீளவும் இலங்கையை வந்தடைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீங்கேற்படுத்தும் கூறுகள் இருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதே உரம் ஏற்றப்பட்ட கப்பல் சிங்கப்பூருக்குச்சென்று மீளத்திரும்பும்போது தூய்மையானதாக மாறியிருக்குமா? இந்த உரத்தைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து எம்மால் பல சந்ததிகள் கடந்தும் மீளமுடியாதுபோகலாம்.

அதேவேளை மேற்படி உரம் ஏற்றப்பட்ட கப்பலை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்புவதற்கு சீனா ஏன் நாட்டம் காண்பிக்கின்றது? ஏனெனில், அத்தகைய தீங்கேற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளை எமது நாட்டின் நிலத்திற்குள் உட்செலுத்தவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது.

தேயிலைச்செய்கையில் தலைசிறந்த முதன்மை நாடாகத் திகழ்வதற்கு சீனா விரும்புகின்றது. அதற்கேற்றவாறு சீனாவில் தேயிலை உற்பத்தியும் இடம்பெறுகின்றது.

இருப்பினும் இலங்கையில் உற்பத்திசெய்யப்படும் தேயிலைக்குரிய அந்த 'சிலோன் டீ' என்ற உலகப்பிரபலம் வாய்ந்த வர்த்தக நாமத்தை சீனாவினால் முறியடிக்கமு டியாதுள்ளது.

எனவே எமது நாட்டின் தேயிலைச்செய்கையை முழுமையாக சீர்குலைப்பதற்காகவா இந்த சதித்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என்ற சந்தேகம் நிலவுகின்றது. எனவே சந்ததிகள் கடந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த உரத்தைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.