எம்.மனோசித்ரா

கொழும்பு - முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் எலிஹவுஸ்பார்க் பகுதியில் இரவுநேர கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடிக் கொண்டிருந்த சந்தேகநபரொருவரை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த சந்தேகநபர் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் தாக்குதலுக்கு உள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என்று மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகபர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விழைவித்தமை , பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியமை, படுகாயமடையச் செய்தமை, கைது செய்த போது தப்பிச் செல்ல முயற்சித்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளார். எனவே இவருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போதைப்பொருள் வியாபாரிகள் பல சந்தர்ப்பங்களிலும் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படுகின்றனர். அவ்வாறான சகலருக்கு எதிராகவும் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.